மேலும்

மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து அனுமதிக்கும் சிறிலங்கா – பிரித்தானிய ஊடகம்

maithriசிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்ற மீறல்கள் தொடர்பான உள்ளக விசாரணை பக்கச்சார்புடையதாகவும் வினைத்திறனற்றதாகவும் காணப்பட்ட போதே அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தது.

இவ்வாறு பிரித்தானியாவின் TheGuardian நாளிதழில், Jason Burke எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

மைத்திரிபால சிறிசேன அதிபராகப் பொறுப்பேற்று ஒரு ஆண்டு ஆகிய பின்னரும் கூட, சித்திரவதைகள், சட்ட ரீதியற்ற தடுப்பு போன்ற பல்வேறு மீறல்கள் சிறிலங்காவில்  தொடர அனுமதிக்கப்படுவதாக சிறிலங்கா அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 12 மாதங்களில் இடம்பெற்ற 27 தனிப்பட்டசம்பவங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அனைத்துலக பரப்புரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் ‘சித்திரவதைகளிலிருந்து விடுதலை’ என்கின்ற அமைப்பானது சித்திரவதைகளுக்கு உள்ளாகியவர்களுக்கு மருத்துவ சார் உதவிகளை வழங்கி வருகின்றது.

இந்த நிறுவனமானது சித்திரவதைகளுக்கு உள்ளாகிய எட்டுப் பேரின் முறைப்பாடுகளை ஆராய்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட எட்டுப் பேரும் சிறிலங்காவைச் சேர்ந்த சிறுபான்மைத் தமிழ் சமூகத்தவர்களாவர். சிறிலங்காவின் புலனாய்வு மற்றும் இராணுவ அதிகாரிகளே தம்மை சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

சிறிலங்கா 26 ஆண்டு கால கொடிய யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தீவாகும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச படைகளுக்கும் இடையிலான யுத்தம் பல ஆண்டுகளாகத் தொடரப்பட்டு 2009ல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ச, கடந்த ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் தோல்வியடைந்தார். சிறிலங்காவில் வாழும் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் சீர்திருத்தத்தையும் ஏற்படுத்துவதாக, அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்ட சிறிசேன வாக்குறுதி வழங்கியிருந்தார்.

குறிப்பாக இவர் தனது கன்னி உரையில் சிறிலங்காவில் இடம்பெறும் கடத்தல் சம்பவங்களை முடிவுக்குக் கொண்டு வருவதாக வாக்குறுதி வழங்கியிருந்தார்.

தனது நாட்டில் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு போரின் போது இடம்பெற்ற பல்வேறு மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பளிக்க வேண்டும் என்பதில் சிறிசேன உறுதியாக நிற்பதானது வரவேற்கத்தக்க மாற்றம் என ‘சித்திரவதைகளிலிருந்து விடுதலை’ அமைப்பின் கொள்கை மற்றும் ஆதரவிற்கான இயக்குனர் சொன்யா சீற்ஸ் தெரிவித்துள்ளார்.

‘இவ்வாறான புதிய மாற்றங்களை மேற்கொள்ளும் சிறிலங்காவின் அதிபர், சிறிலங்காவின் பாதுகாப்புப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளை முற்றாக ஒழிப்பதற்கான தெளிவான கோட்பாட்டை வரையறுப்பதுடன் இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்க வேண்டும்’ என சொன்யா சீற்ஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிசேன ஆட்சிக்கு வந்த பின்னர் சிறிலங்கா இராணுவம் மற்றும் புலனாய்வுத் துறைகளைச் சேர்ந்தவர்களால் அந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் மீது எவ்வாறான சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை தனது மருத்துவ ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்துவதாக ‘சித்திரவதைகளிலிருந்து விடுதலை’ என்ற அரச சார்பற்ற நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிறிலங்காவின் போருக்குப் பின்னான காலப்பகுதியில் தொடரப்பட்ட ‘அரச சித்திரவதை இயந்திரமானது’ தற்போதும் மக்கள் மீது தனது சித்திரவதைகளை மேற்கொண்டு வருவதாக இந்த அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான பல்வேறு ஆதாரங்கள் உள்ள போதிலும் தாம் எவ்வித மனித உரிமை மீறல்களிலும் ஈடுபடவில்லை என சிறிலங்கா இராணுவத்தினரும் காவற்துறையினரும் கூறுகின்றனர்.

‘சித்திரவதைகளிலிருந்து விடுதலை’ என்ற அமைப்பால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்களில் இருவர் வவுனியாவின் வடக்கிலுள்ள இராணுவ முகாம் வைத்து சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டமை ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இராணுவ முகாமானது சிறிலங்கா இராணுவத்தின் தடுப்பு மற்றும் சித்திரவதைக் கூடமாக இயங்கி வருவதாகவும் இதில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காடுகளில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் வைத்து தாம் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக இதில் பாதிக்கப்பட்ட ஏனையவர்கள் கூறுகின்றனர். இவர்களில் பலர் சித்திரவதைகளின் போது நெருப்பில் காய்ச்சப்பட்ட சூடான இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சிலர் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவற்றை பாதிக்கப்பட்டவர்களின் உடல்களில் காணப்படும் வடுக்கள் மூலம் உறுதிப்படுத்துவதாக இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அடிக்கடி இடம்பெற்ற ‘வெள்ளை வான்’ கடத்தல்கள் தற்போதும் சிறிலங்காவில் இடம்பெறுவதாகவும் கடந்த மாதமும் கடத்தல் சம்பவம் இடம்பெற்றதாகவும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இனந்தெரியாதவர்கள் வெள்ளை வான்களில் வந்து இவ்வாறான கடத்தல்களை மேற்கொள்வதாகவும் ‘சித்திரவதைகளிலிருந்து விடுதலை’ என்ற அமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

‘இவ்வாறான வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் வழமைபோன்று ஒரு வியாபாரமாக இடம்பெறுகின்றமை கவலைக்குரியதாகும்’ என அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தைச் சேர்ந்த ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். இந்த அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சிறிலங்காவில் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாகிய 20 பேரின் சாட்சியங்கள் அடிப்படையாகக் கொள்ளப்பட்டுள்ளன.

இவர்கள் தற்போது சிறிலங்காவை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் வாழ்கின்றனர். இவர்கள் வவுனியாவிலுள்ள இராணுவ முகாம் ஒன்று சித்திரவதைக் கூடமாக இயங்குவதை உறுதிப்படுத்தியுள்ளனர். இதில் ஒருவரது முறைப்பாடானது அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் மற்றும் சித்திரவதைகளிலிருந்து விடுதலை ஆகிய இரண்டு அமைப்புக்களாலும் விசாரணை செய்யப்பட்டுள்ளது.

அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தால் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களாவர். இவர்களுள் பலர் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பில் இணைக்கப்பட்டவர்களாவர்.

இவர்களில் சிலர் புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்ட போது 18 வயதிற்கு உட்பட்டவர்களாக காணப்பட்டதுடன் புலிகள் அமைப்பில் சில வாரங்கள் மட்டுமே பணிபுரிந்தவர்களாவர். ஆகவே போரின் இறுதியில் இவர்கள் தம்மை முன்னாள் புலிகள் என இராணுவத்திடம் பதிவுசெய்யாமல் இருந்தனர்.

இவர்களில் சிலர் போரின் பின்னர் தேர்தல் பரப்புரைகள் போன்ற அரசியற் செயற்பாடிகளிலும் காணாமற்போனவர்கள் தொடர்பாக பரப்புரை செய்தவர்களாகவும் காணப்பட்டனர். இதற்காகவே இவர்கள் கடத்தப்பட்டனர். இவ்வாறு கடத்தப்பட்டவர்களுள் ஐந்து பெண்களும் அடங்குவர்.

கம்பிகள், வயர்கள் மற்றும் தடி போன்ற பல்வேறு பொருட்களால் தாம் தாக்கப்பட்டதாகவும் நீர் நிரம்பிய பரல்களில் அடைக்கப்பட்டும் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டும் தாம் சித்திரவதைகளுக்கு உள்ளாகியதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

சிறிலங்கா இராணுவத்தினராலும் புலனாய்வாளர்களாலும் தடுத்து வைக்கப்பட்டவர்களில் பலர் மீண்டும் மீண்டும் பாலியல் வன்புணர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டனர். போரின் இறுதியில் தோற்கடிக்கப்பட்ட புலிகள் அமைப்பிற்கு புத்துயிரளிக்கும் நோக்குடன் செயற்படுவதாக தம் மீது பழிசுமத்தப்பட்டு சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களின் உடல்களில் காணப்படும் காயங்கள் மற்றும் வடுக்கள் போன்றன நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட வல்லுனர்களால் மருத்துவ ரீதியாகப் பரிசோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் தாம் எங்கு வைத்து சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதையும் ஆழமாக விபரித்துள்ளனர்.

‘சிறந்த அனுபவங்களைக் கொண்ட சட்டவாளர்களின் உதவியுடனேயே பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளன. சித்திரவதைகளுக்கு உள்ளாகி சிறிலங்காவிலிருந்து தப்பி வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளவர்களால் தெரிவிக்கப்பட்ட விடயங்களின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’ என அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் பேச்சாளர் பிரான்சிஸ் ஹரிசன் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் தொடர்பில் சிறிசேன மீது ஏற்கனவே அழுத்தம் இடப்பட்டுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காவில் பல்வேறு போர்க்குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கடந்த செப்ரெம்பரில் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

இவ்வாறான மீறல்களை விசாரணை செய்வதற்கு ‘சிறப்பு அனைத்துலக நீதிமன்றம்’ உருவாக்கப்பட வேண்டும் எனவும் இப்பொறிமுறை மூலம் மிகவும் மோசமான மீறல்களில் ஈடுபட்ட ஒவ்வொரு தனிமனிதர்களுக்கு எதிராகவும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஐ.நா வலியுறுத்தியது.

சிறிலங்காவின் பாதுகாப்புப் படையினரால் சித்திரவதை, படுகொலைகள், பலவந்தமான காணாமற் போதல்கள், பாலியல் மீறல்கள் போன்ற பல்வேறு கொடிய மீறல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதேவேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள், படுகொலைகள், சிறுவர் ஆட்சேர்ப்புக்கள் போன்றன செயற்படுத்தப்பட்டதாகவும், ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமை உயர் ஆணையாளர் செய்ட் ராட் அல்-ஹுசைன் வெளியிட்ட 220 பக்க அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

சிறிலங்காவில் போரில் ஈடுபட்ட இரு தரப்பினரும் அதிகளவிலான குற்றங்களில் ஈடுபட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

சிறிலங்காவின் முன்னாள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்ற மீறல்கள் தொடர்பான உள்ளக விசாரணைப் பொறிமுறையானது பக்கச்சார்புடையதாகவும் வினைத்திறனற்றதாகவும் காணப்பட்ட போதே அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தது.

சிறிலங்காவின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களும் பெரிதளவில் அமுல்படுத்தப்படவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *