இராணுவக் கட்டளை அமைப்பில் மாற்றம்- டிவிசன் தளபதியாக கீழ் இறக்கப்பட்டார் சவேந்திர சில்வா
சிறிலங்கா இராணுவக் கட்டளை அமைப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள அதேவேளை, போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா 53ஆவது டிவிசனின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, கடந்த 9ஆம் நாள் நடைமுறைக்கு வரும் வகையில், சிறிலங்கா இராணுவ உயர்மட்டப் பதவிகளில் மாற்றங்களைச் செய்துள்ளார்.
இதன்படி,15 மேஜர் ஜெனரல்கள், 25 பிரிகேடியர்கள், 32 கேணல்கள், 8 லெப்.கேணல்கள், ஒரு மேஜர் என 81 சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் தொடக்கம் இடமாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, யாழ். படைகளின் தலைமைய தளபதியாக மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இராணுவ செயலாளராக மேஜர் ஜெனரல் ஜனக வல்கம நியமிக்கப்பட்டுள்ளார்.
வன்னிப்படைகளின் தலைமையக தளபதியாக மேஜர் ஜெனரல் உபுல் விதானகே நியமிக்கப்பட்டுள்ளார்.
கஜபா படைப்பிரிவின் தளபதியாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேராவும், மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன இயந்திர காலாற்படைப்பிரிவின் தளபதியாகவும், மேஜர் ஜெனரல் சுமித் மானவடு ஆட்டிலறிப் படைப்பிரிவின் தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இராணுவத் தலைமையகத்தில் பொது அதிகாரிகளின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேராவும், ஆயுத தளபாடப்பிரிவின் அதிகாரியாக மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ் தியத்தலாவ இராணுவப் பயிற்சி முகாமுக்குப் பொறுப்பாகவும், மேஜர் ஜெனரல் லலித் தவுலகல இராணுவப் பயிற்சிப்பிரிவுக்குப் பொறுப்பாகவும், மேஜர் ஜெனரல் மகிந்தகுலசூரிய இராணுவ அணிவகுப்பு பிரிவுக்கு பொறுப்பாகவும், நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேஜர் ஜெனரல் மனோ பெரேரா மற்றும் மேஜர் ஜெனரல் மைத்ரி டயஸ் ஆகியோர் இராணுவத் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதேவேளை, போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளவரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா 53ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இறுதிக்கட்டப் போரில் 58ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியவர் என்பதுடன், பின்னர் ஐ,நாவுக்கான சிறிலங்காவின் பிரதி விதிவிடப் பிரதிநிதியாகவும் கடமையாற்றியிருந்தார்.
இறுதிக்கட்டப் போரில், இவருடன் இணைந்து டிவிசன்களின் கட்டளை அதிகாரிகளாகச் செயற்பட்ட அதிகாரிகளுக்கு உயர்மட்டப் பதவிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், இவர் மட்டும், 53ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.