மேலும்

எங்கிருந்து போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதென்று தீர்மானி்க்கவில்லையாம்

karunasena-hettiarachi-army hq (2)பாகிஸ்தானிடம் இருந்து போர் விமானங்கள் எதையும் வாங்குவதற்கு இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில், “ பாகிஸ்தானிடம், எட்டு ஜே.எவ்-17 போர் விமானங்களை கொள்வனவு செய்யும் உடன்பாடு கையெழுத்திடப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் அனைத்தும் பொய்.

இதுதொடர்பாக நாம் பாகிஸ்தானுடன் எந்த உடன்பாடு செய்து கொள்ளவில்லை.

எந்த நாட்டிடம் இருந்தாவது நாம் போர் விமானங்களை வாங்க வேண்டியுள்ளது. ஆனால் நாம் இன்னமும், பாகிஸ்தானிடம் இருந்தா, இந்தியாவிடம் இருந்தா அல்லது வேறு நாட்டிடம் இருந்தா அவற்றை வாங்குவது என்று முடிவு செய்யவில்லை.

போர்ச் சூழலிலோ, போர் இல்லாத சூழலிலோ ஒரு நாடு, தனது பாதுகாப்பை பேண வேண்டும். இந்த இராணுவ மூலோபாயம் அனைவருக்கும் புரிந்த ஒன்றுதான்.

போர் இல்லாத நிலையில் எல்லா இராணுவ கட்டமைப்புகளையும் கலைத்து விட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

போர் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பாதுகாப்பைப் பேணுவதே, அரசாங்கத்தின் உயர் முன்னுரிமையான விடயமாகும். எனவே, எமக்கு போர் விமானங்கள் மட்டுமன்றி, ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களும் தேவைப்படுகிறது.

போர் முடிந்து விட்டாலும், விமானப்படையை தரமுயர்த்துவதற்க, போர் விமானங்களை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை சிறிலங்கா அரசாங்கத்துக்கு இருக்கிறது.

எனினும், சிறிலங்கா விமானப்படையை மேலும் வலுப்படுத்த இன்னும் எத்தனை போர் விமானங்களை கொள்வனவு செய்ய வேண்டும் என்ற விபரத்தை வெளியிட முடியாது. அது இராணுவ விவகாரம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *