மேலும்

சிறிலங்காவின் திட்டத்தை முடங்கிய இந்தியா – வெள்ளைத் தாளில் வந்த வில்லங்கம்

Jf-17 Thunder Block 2இந்தியாவின் எதிர்ப்புகளை அடுத்து, பாகிஸ்தானிடம் ஜே.எவ்.-17 போர் விமானங்களைக் கொள்வனவு செய்யும் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம், தற்போதைக்காவது கைவிட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மூன்று வாரங்களுக்கு முன்னர், புதுடெல்லியில் இருந்து கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட இராஜதந்திரக் குறிப்பு ஒன்றில், ஜே.எவ்-17 போர் விமானங்களை சிறிலங்கா ஏன் வாங்கக் கூடாது என்பதற்கான நியாயங்கள் விபரிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதில் இந்தப் போர் விமானங்களின் தொழில்நுட்பத் தரம் குறித்த மதிப்பீடும், சிறிலங்காவுக்கு தற்போது போர் விமானங்கள் தேவையில்லை என்ற இந்தியாவின் நிலைப்பாடும் உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்தவாரம், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். இதன்போது,  ஜே.எவ்.போர் விமானங்களைக் கொள்வனவு செய்யும் உடன்பாடு கையெழுத்திடப்படவுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த போர் விமானங்களை கடன் அடிப்படையில் கூட விற்பதற்கு பாகிஸ்தான் தயாராக இருந்தது.

எனினும், நவாஸ் ஷெரீபின் பயணத்தின் போது. கையெழுத்திடப்பட்ட உடன்பாடுகளில், போர் விமானக் கொள்வனவு உடன்பாடு  உள்ளடங்கவில்லை. இதற்கு இந்தியா தெரிவித்த எதிர்ப்பே காரணமாகும்.

பாகிஸ்தான் போர் விமானங்களை வாங்கும் நடவடிக்கையில் சிறிலங்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்த பின்னர், மூன்று வாரங்களுக்கு முன்னர், புதுடெல்லியில் இருந்து கொழும்பு அரச உயர்மட்டத்துக்கு ஒரு இராஜதந்திரக் குறிப்பு அனுப்பப்பட்டது.

கடிதத் தலைப்பில்லாத வெள்ளைத் தாள் ஒன்றிலேயே அந்தக் குறிப்புகள் இடம்பெற்றிருந்தன. அதில் கையொப்பம் கூட இருக்கவில்லை.

இதில் விடுதலைப் புலிகளுடன் போர் முடிந்து ஆறு ஆண்டுகளாகிவிட்ட நிலையில், தற்போதைய நிலையில் சிறிலங்காவுக்கு போர் விமானங்கள் தேவையில்லை என்று கூறப்பட்டிருந்தது.

ஜே.எவ்-17 போர் விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள ரஷ்ய இயந்திரங்கள் நல்லவையல்ல என்றும், சீனா கூட இந்த விமானங்களைப் பயன்படுத்தவில்லை என்றும் அந்த குறிப்பில் கூறப்பட்டிருந்ததாகவும் சிறிலங்கா வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *