மேலும்

ராஜபக்சக்களை அரசியலில் இருந்து அகற்ற முடியாது – மார்தட்டுகிறார் பசில்

basilஐதேகவினாலோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினாலோ, ராஜபக்‌சக்களை அரசியலிலிருந்து அகற்ற முடியாது என்று, சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ச தெரிவித்துள்ளார். பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ஐதேகவினாலோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினாலோ, ராஜபக்‌சக்களை அரசியலிலிருந்து அகற்ற முடியாது.  மக்களால் மாத்திரமே அவர்களை அரசியலில் இருந்து நீக்க முடியும்.

மகிந்த ராஜபக்‌ச சதி செய்து முன்னுக்கு வந்தவர் அல்ல, போராட்டத்தின் மூலமே முன்னுக்கு வந்தவர்.

மகிந்த ராஜபக்ச ஆட்சி வீழ்த்தப்பட்ட பின்னர் நாடு எதிர்கொண்டிருக்கும் நிலைமை கவலை தருகிறது.

எமது நிர்வாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி செயற்பாடுகள் தற்பொழுது முழுமையாக முடங்கிப் போயுள்ளன.

மைத்திரிபால சிறிசேனவை அதிபராகக் கொண்டு வந்த மக்கள் யோசித்துப் பார்த்தால் நாட்டில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது அவர்களுக்குப் புரியும்.

கடந்த அரசாங்கம் தோல்வியடைவதற்கு நான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது.

அனைத்துலக நாடுகள் சிலவற்றின் அழுத்தம் காரணமாக, சிறிலங்கா அரசாங்கத்தின் குறைபாடுகள் பெரிதுபடுத்தப்பட்டமையே இதற்குக் காரணம்.

உலக நாடுகள் பல எம்முடன் கோபம் கொண்டன. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என பல நாடுகள் எதிர்ப்புக்களை காண்பித்தன.

அனைத்துலக ரீதியில் மட்டுமன்றி, இந்த நாடுகள் உள்நாட்டிலும் அழுத்தம் கொடுத்தன.

ராஜபக்ச நிர்வாகம் வீழ்த்தப்பட்டதன் பின்னணியில் இந்தியாவும் அமெரிக்காவும் இருந்தன.

நாட்டில் தோன்றியிருக்கும் அரசியல் சூழ்நிலை தொடர்பாக, ஐதேக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி, உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும் மனம் சோர்வடைந்திருப்பதால், புதியதொரு அரசியல் பயணம் குறித்து பலர் யோசிக்கத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *