பாகிஸ்தான் போர் விமானங்களை வாங்கவில்லை – சிறிலங்கா விமானப்படை மறுப்பு
பாகிஸ்தானிடம் இருந்து. ஜே.எப்-17 போர் விமானங்களை வாங்கும் உடன்பாட்டில் சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திட்டிருப்பதாக, இந்திய, பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான செய்திகளை சிறிலங்கா விமானப்படை நிராகரித்துள்ளது.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் முன்னிலையில், நேற்று சிறிலங்காவுக்கு ஜே.எவ்.-17 போர் விமானங்களை விற்கும் உடன்பாட்டில் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளதாக இந்திய, பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
எனினும், இது குறித்து இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் சந்திம அல்விஸ், இந்த செய்திகளை மறுத்துள்ளார்.
“இதுபற்றிய ஊடகங்களில் ஏராளமான ஊகங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் உண்மை என்னவெனில், அயல் நாடுகளால் முன்வைக்கப்பட்ட பல்வேறு தெரிவுகள் தொடர்பாக நாம் இன்னமும் மதிப்பீட்டுகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.
நாம் பொருத்தமானதொரு விமானத்தை எதிர்பார்க்கிறோம். ஆனால் இன்னமும் முடிவு எதையும் எடுக்கவில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, நேற்று கையெழுத்திடப்பட்ட எட்டு உடன்பாடுகளில், ஜே.எவ்-17 போர் விமானங்களைக் கொள்வனவு செய்யும் உடன்பாடு உள்ளடங்கவில்லை என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.