ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை – இராணுவப் புலனாய்வு அதிகாரி கைது
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட் தர அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவரிடம், ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.
முஸ்லிம் இனத்தவரான இந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி கிரித்தலவில் உள்ள சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு முகாமில் பணியாற்றி வருகிறார்.
இவர், சிறிலங்கா இராணுவத்தில் இணைந்து கொள்வதற்கு முன்னர், பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஆதரவாளராக இருந்தவர் என்றும் கூறப்படுகிறது.
இந்தப் படுகொலை தொடர்பாக பிள்ளையான் உள்ளிட்ட நால்வர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளிலேயே, ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையில், குறிப்பிட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.