மேலும்

போர் விமானக் கொள்வனவு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை – சிறிலங்கா விமானப்படை

Jf-17 Thunder Block 2சிறிலங்கா விமானப்படைக்கு போர் விமானங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பான எந்த முடிவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்று சிறிலங்கா விமானப்படை பேச்சாளர் குறூப் கப்டன் சந்திம அல்விஸ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானிடம் இருந்து ஜே.எவ்-17 போர் விமானங்களைக் கொள்வனவு செய்ய சிறிலங்காவுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

”சிறிலங்கா விமானப்படைக்குப் போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், இது தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

நாம் குறிப்பிட்ட ஒரு விமான ரகத்தின் மீது ஆர்வம் காட்டவில்லை. ஆனால் எமது தேவைக்குப் பொருத்தமான பலநோக்கு போர் விமானங்களை எதிர்பார்க்கிறோம்.

இந்த விமானக் கொள்வனவு பேரத்தை உறுதிப்படுத்துவதற்காகவே சில தரப்புகள், ஜேஎவ்-17 போர் விமானங்களை சிறிலங்கா விமானப்படை வாங்கவுள்ளதாக தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

போர் முடிவடைந்து விட்டது. எனவே, தாக்குதலுக்கான போர் விமானங்கள் தேவையில்லை.

பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தக் கூடிய பலநோக்குப் போர் விமானங்களை பெரியளவில் தேவைப்படுகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *