மேலும்

வன்முறைகள் நடந்தால் வாக்களிப்பு நிறுத்தப்படும் – தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை

Mahinda Deshapriyaசிறிலங்காவில் இன்று நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், வீண் சிரமங்களை தவிர்க்கும் வகையில் நேரகாலத்துடன் வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று வாக்களித்து, வாக்காளர்கள் தமது ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய.

தேர்தல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் இன்றைய உணவை சிறையிலேயே சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை, வாக்களிப்பு நிலையத்தில் இருந்து 500 மீற்றர் வரையான பகுதி பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்குள் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறுவோர் கைது செய்யப்பட்டால் அதனைத் தொடர்ந்து வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு, காவல்துறை பிணை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இல்லை என்றும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு நிலையத்துக்குள்ளேயோ அல்லது அதை அண்டிய பிரதேசங்களிலோ வன்முறைகள் இடம்பெற்றால் குறிப்பிட்ட வாக்களிப்பு நிலையத்தின் வாக்களிப்பு முற்றாக ரத்துச் செய்யப்பட்டு, வேறொரு நாளில்  வாக்களிப்பு நடத்தப்படும்.

அதுவரை அந்த மாவட்டத்துக்கான பெறுபேறுகள் வெளியிடப்படுவது தாமதப்படுத்தப்படும்.

வாக்காளர்கள் அலட்சியப் போக்கை கைவிட்டுவிட்டு நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக தங்களுக்குள்ள உரிமையை இன்று முழுமையாக பயன்படுத்தி நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கு ஒத்துழைக்க வேண்டுமெனவும் தேர்தல்கள் ஆணையாளர் கேட்டுக்கொண்டார்.

வாக்களிப்பதை எவராலும் தடுக்க முடியாது என்றும், வாக்காளர்கள் அடையாளமிடும் கட்சி மற்றும் விருப்பு வாக்கு இலக்கங்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என்பதற்கான உத்தரவாதத்தை தேர்தல்கள் திணைக்களம் வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்கு எண்ணும் பணி, மிகவும் சூட்சுமமான முறையிலேயே முன்னெடுக்கப்படும் என்பதனால் குறித்த பிரதேசத்தின் வாக்காளர்கள் எந்த கட்சியின் ஆதரவாளர்கள் என்ற தகவல்கள் வெளிவருவதற்கான வாய்ப்பு இல்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *