மேலும்

சிறிலங்காவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் – சற்று நேரத்தில் வாக்களிப்பு ஆரம்பம்

Srilanka-Electionசிறிலங்காவின் எட்டாவது நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள வாக்களிப்பு, மாலை 4 மணியுடன் நிறைவடையும்.

சிறிலங்கா சுதந்திரம் பெற்ற பின்னர், நடைபெறும் இந்த 15அவது பொதுத்தேர்தலில், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெறுகிறது.

2014ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நடக்கும் இந்த தேர்தலில் 15,044,490 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இம்முறை தேர்தலில், 21 அரசியல் கட்சிகள் மற்றும் 201 சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 6,151 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இவர்களில், அரசியல் கட்சிகளின் சார்பில் 3,653 வேட்பாளர்களும், சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 2,498 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

சிறிலங்காவின் 22 தேர்தல் மாவட்டங்களிலும், 12,314 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகி பிற்பகல் 4 மணியுடன் நிறைவடையும்.

அதையடுத்து, வாக்குப் பெட்டிகள், நாடெங்கும் அமைக்கப்பட்டுள்ள, 1600 வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அவற்றை எண்ணும் பணி ஆரம்பிக்கப்படும்.

இன்று நள்ளிரவு அளவில் முதலாவது தேர்தல் முடிவு எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, நாளை மதியத்துக்குள் இறுதி நிலவரம் தெரியவரும்.

சிறிலங்காவில் 2014 வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், 56 தேர்தல் தொகுதிகளில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் இருக்கின்றனர்.

இவற்றில் மிக அதிகமான வாக்காளர்களைக் கொண்ட தொகுதி நுவரெலிய – மஸ்கெலிய ஆகும். இங்கு 302,836 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டாவதாக அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியான ஹோமகமவில், 174,909 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

மூன்றாவதாக, கடுவெல தொகுதியில், 172,499 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஊர்காவற்றுறைத் தொகுதியிலேயே, மிக குறைந்தளவாக 22,057 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தேர்தலில் அதிக பட்சமாக கொழும்பு மாவட்டத்தில் இருந்து 19 உறுப்பினர்களும், குறைந்தபட்சமாக திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 4 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *