மேலும்

பிரகீத்தை கடத்துவதற்கு முன்னாள் புலிகளை தந்திரமாகப் பயன்படுத்திய சிறிலங்கா இராணுவம்

prageeth eknaligodaஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு பல நாட்களாக கிரிதல இராணுவ முகாமில் வைத்து விசாரணை செய்யப்பட்ட பின்னரே காணாமற்போகச் செய்யப்பட்டுள்ளார் என்று, குற்றப்புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பிரகீத் எக்னெலிகொட கடத்தல் மற்றும் விசாரணை தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டதையடுத்தே இந்த விபரங்கள் தெரியவந்துள்ளன.

அவர்களில் ஒருவர் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் சுமதிபால சுரேஸ்குமார். மற்றவர் கிரிதல இராணுவ முகாமில் பணியாற்றி தற்போது ஓய்வுபெற்றுள்ள ஸ்ராவ் சார்ஜன்ட் சுது பண்டா.

இவர்கள் காணாமற்போன எக்னெலிகொட தொடர்பான முக்கியமான தகவல்களை வழங்கியுள்ளனர்.

இந்த தகவல்களின் மூலம் அம்பலப்படுத்தப்பட்ட ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கு சிறிலங்கா இராணுவம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று சிறிலங்கா காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.

கைது செய்யப்பட்ட சுரேசின்  தந்தை ஒரு சிங்களவர்.தாய் தமிழர். இவர்கள் இருவரும் இராணுவத் தாக்குதல் ஒன்றில் இறந்து விட்டனர்.

16 வயதில் -1985ஆம் ஆண்டு இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார்.

இந்தியப் படையினரின் கண்ணிவெடியில் இவர் கால் ஒன்றை இழந்தார். புலிகள் இயக்கத்தில் தவேந்திரன் என்று அழைக்கப்பட்ட அவர், காலை இழந்த பின்னர், புலனாய்வுப் பிரிவில் பணியாற்றினார்.

போரின் போது அவர், ராமின் தலைமையில் கிழக்கில் செயற்பட்ட அவர், திருகோணமலை மாவட்டத்தில் அரசியல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்தார்.

2009ஆம் ஆண்டு போரின் முடிவில் ராம் மற்றும் சுரேஸ் ஆகியோர் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தனர். அவர்களை இரண்டரை ஆண்டுகளாக தமது புலனாய்வு நடவடிக்கைகளுக்காக சிறிலங்கா இராணுவம் பயன்படுத்தியது.

சுரேசின் தொலைபேசி பதிவேடு ஒன்றில் எக்னெலிகொடவின் இலக்கம் இருந்தது குறித்து கிரிதல இராணுவ முகாம் அதிகாரிகள் சுரேசிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், அமைதி உடன்பாட்டுக் காலத்தில் அந்த ஊடகவியல்லாளரை ஜெயலத் ஜெயவர்த்தன மூலம் மடுவில் சந்தித்து அறிமுகப்படுத்தியதாக தெரிவித்திருந்தார்.

அதையடுத்து, எக்னெலிகொடவுக்கு தொலைபேசியில் அழைத்து பேசுமாறு இராணுவத்தினர் கூறினர். அந்த உரையாடலை இராணுவத்தினர் இரகசியமாக ஒட்டுக்கேட்டனர்.

அப்போது இராணுவத்தை எக்னெலிகொட கடுமையாக விமர்சித்தார்.

பின்னர், அந்த இராணுவ முகாமின் பொறுப்பதிகாரியான தம்மிக குமார வின் உத்தரவின் பேரில், எக்னெலிகொடவைச் சந்தித்த கோப்ரல் பிரியந்த, தன்னை சுரேசின் சகோதரன் என்று அறிமுகப்படுத்தினார்.

அந்தச் சந்திப்பு சிகிரியாவில் உள்ள எக்னெலிகொடவுக்குச் சொந்தமான பண்ணைக் காணியில் இடம்பெற்றது.

அப்போது, தானும் சகோதரன் சுரேசும், இராணுவத்திடம் இருந்து தப்பி வந்துள்ளதாகவும், தாம் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் பிரியந்த.

அதற்கு தான் உதவுவதாக குறிப்பிட்ட எக்னெலிகொட தேவையான ஆவணங்களைத் தருமாறு கேட்டார்.

அவர் கேட்ட ஆவணங்களுடன், 2010 ஜனவரி 24ஆம் நாள் ராஜகிரியவில், எக்னெலிகொடவைச் சந்தித்த பிரியந்த, அவரை அங்கிருந்து கிரிதல இராணுவ முகாமுக்கு கொண்டு வந்தார்.” என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எக்னெலிகொட விசாரணை செய்யப்பட்ட மற்றும் காணாமற்போன சூழ்நிலைகள் தொடர்பான விபரங்களும் விரைவில் வெளிவரும் என்று குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *