மேலும்

மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்காக கடும் சவாலை எதிர்கொண்டுள்ள மகிந்த – ஏஎவ்பி

mahinda- a'puraராஜபக்ச தனது தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் தனது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றங்கள் தொடர்பாக மக்கள் தெரிவிக்கும் போது அதனை இல்லை என வாதிடாது இவ்வாறான குற்றங்கள் மீண்டும் இடம்பெறாது என்பதைக் கூறிவருகிறார்.

இவ்வாறு ‘ஏஎவ்பி’ ஊடகத்துக்காக, ‘கிரிஷன் பிரான்சிஸ்’ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.  இதனைப் ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’.

சிறிலங்காவின் அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ச தற்போது மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். மகிந்த ராஜபக்சவின் சொந்த எதிர்கால அரசியல் மட்டும் இதில் தொக்கி நிற்கவில்லை. இவரது ஆதரவாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த வலைப்பின்னலும் எதிர்பார்ப்புடன் உள்ளது.

சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியுற்ற போது இவரது ஆதரவாளர்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் தனது அதிபர் பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மகிந்த ராஜபக்ச அதிபர் தேர்தலை நடத்தவுள்ளதாக அறிவித்திருந்தார். தான் இந்தத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்கின்ற அதீத நம்பிக்கையே இதற்கான காரணமாக இருந்தது.

ஆனாலும் இதில் இவர் எதிர்பார்த்திராத தோல்வியைச் சந்தித்ததானது ராஜபக்சவுக்கு மட்டுமல்ல இவரது ஒட்டுமொத்த குடும்பத்திற்குமே பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இவர்களுக்கு எதிராக தற்போது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆகவே அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ச இம்மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

இவர் ஆட்சியிலிருந்த போது, சிறிலங்காவில் பல பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட யுத்தத்தை வென்றெடுத்ததன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் போர்க் கதாநாயகனாகவும் தமது மீட்பராகவும் மெச்சப்படுகிறார்.

இவர் தனது ஆட்சிக்காலத்தில் தனக்குச் சாதகமான பல்வேறு அதிகாரங்களை நிலைநிறுத்தினார். இரண்டு தடவைகள் மட்டுமே அதிபராகப் பதவி வகிக்க முடியும் என்ற சட்ட விதியை மாற்றியமைத்தார்.

ஏனெனில் இதன்மூம் தொடர்ந்தும் தனது ஆயுட்காலம் வரை அல்லது தனது மூத்த மகன் அதிபர் பதவியில் அமர்வதற்கான வளர்ச்சியை எட்டும் வரை அதிபராகப் பதவிவகிக்க முடியும் என ராஜபக்ச கனவு கண்டார்.

இவர் முக்கிய பல்வேறு பதவிகளிலும் தனது சொந்த குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் விசுவாசிகளை அமர்த்தினார். குறிப்பாக நாடாளுமன்றின் அதிகாரங்கள், நீதிமன்றங்கள் மற்றும் அரச நிறுவகங்கள் முற்றிலும் ராஜபக்சவின் விசுவாசிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.

ஆனாலும் இந்த நடைமுறையை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்சவின் முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மாற்றியமைத்தார்.

தற்போது ராஜபக்சவின் நெருங்கிய சகபாடிகளுக்கு எதிராக கொலை, கொள்ளை மற்றும் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்தமை போன்றவற்றுக்கு எதிராக பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனாலும் இவர்கள் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகின்றனர்.

தேர்தல் காலத்தில் அமைச்சர் ஒருவரை நியமித்ததற்கு எதிராக ராஜபக்சவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அனைத்துலக சமூகத்தின் உதவியுடன் ராஜபக்சவின் வசமுள்ள சட்டவிரோதச் சொத்துக்களைக் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்கிறது.

ராஜபக்ச அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற பின்னர், ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அதிகாரங்களைத் தம்வசம் வைத்திருந்த இவரது சகோதரர்கள் தமது பதவிகளை இழந்தனர். சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச கைதுசெய்யப்பட்டார்.

தேர்தல் நோக்கங்களுக்காக அரச நிதியை துஸ்பிரயோகம் செய்ததாக பசிலுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. பின்னர் இவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதேபோன்று சிறிலங்காவின் செல்வாக்கு மிக்க முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஊடகவியலாளர்கள், அரசாங்கத்திற்கு எதிரான விமர்சகர்கள், விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் போன்றோர் கடத்தப்பட்டமை தொடர்பில் கோத்தபாயவுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

‘வெள்ளை வான் கடத்தல்கள்’ என அறியப்படும் பலவந்த ஆட்கடத்தல்களுக்கு உட்பட்ட ஒரு சிலரே தற்போது உயிருடன் உள்ளனர்.

அரசியலுக்கு மீண்டும் திரும்பிவருவதுடன், தானும் தனது உடன்பிறப்புக்கள் மற்றும் விசுவாசிகள் தற்போது எதிர்நோக்கும் குற்றவியல் வழக்குகளிலிருந்து தம்மை விடுவிப்பதற்கான நோக்குடனே தற்போது ராஜபக்சவால் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது.

‘ராஜபக்ச மீண்டும் அரசியலில் உள்நுழைவதுடன் நாடாளுமன்ற ஆசனத்தைக் கைப்பற்றுவதற்காக தேர்தலில் போட்டியிடுவதும் இவர் தொடர்பில் சில கேள்விகளை முன்வைக்கிறது.

மறுபுறத்தே, இவர் தனது குடும்பத்தையும் நெருங்கிய நண்பர்களையும் அவர்கள் தற்போது எதிர்நோக்கும் சட்டச் சிக்கல்களிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியாகவே தென்படுகிறது’ என அரசியல் விஞ்ஞானியான ரெரன்ஸ் புறசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற பின்னரும் தற்போது மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதானது ராஜபக்சவின் விடாமுயற்சியைச் சுட்டிக்காட்டுகிறது.

‘அரசியல் என்பது ராஜபக்சவின் உடலின் ஒரு பகுதியாகும். இது இவரின் ஓடும் இரத்தத்தில் கலந்துள்ளது’ என தேசிய சமாதானப் பேரவையின் ஆய்வாளரான ஜெகன் பெரேரா தெரிவித்துள்ளார்.

‘இவர் வைத்திருக்கும் அதிகாரங்களிலிருந்து இவர் செயற்படுகிறார். இவர் ஒருபோதும் தனது முயற்சியைக் கைவிடாத ஒரு போர் வீரராவார்’ என ஜெகன் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற கையோடு தான் மீண்டும் அரசியலில் நுழைவதற்கான அடித்தளத்தை ராஜபக்ச இடத்தொடங்கினார். இவர் தனது ஆதரவாளர்களுடன் கூட்டங்களை ஒழுங்குபடுத்தினார். அத்துடன் பௌத்த விகாரைகளில் இடம்பெற்ற மத விழாக்களில் கலந்து கொண்டார். இதனால் இது ஊடகங்கள் மூலம் மக்களைப் பெரிதும் சென்றடைந்தது.

இதேபோன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த பல உறுப்பினர்களையும் தனது ஆதரவாளர்களாக்கினார். இதனால் ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதற்கு மைத்திரி தனது எதிர்ப்பைக் காண்பிக்க முடியவில்லை.

இவரது விசுவாசிகள் பலருக்கு எதிராக மோசடிகள், கொலை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதால் ராஜபக்ச ஆட்சிக்குத் திரும்பி வந்தால் மட்டுமே தமக்கு விமோசனம் கிடைக்கும் என்பது இவரது விசுவாசிகளின் விருப்பாகும்.

ராஜபக்ச தனது தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் தனது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றங்கள் தொடர்பாக மக்கள் தெரிவிக்கும் போது அதனை இல்லை என வாதிடாது இவ்வாறான குற்றங்கள் மீண்டும் இடம்பெறாது என்பதைக் கூறிவருகிறார்.

‘இது மிகப் பெரிய தவறு. இதற்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். இது மீண்டும் இடம்பெறாது’ என ராஜபக்ச விகாரை ஒன்றில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை நிகழ்வில் தெரிவித்திருந்தார்.

ராஜபக்ச தனது கட்சிக்குள் தனக்கான ஆதரவைப் பெற்று தேர்தலில் போட்டியிடுவதற்கான அனுமதியை வென்றெடுத்தாலும் கூட இன்னமும் இவருக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

‘நான் மகிந்த ராஜபக்சவுடன் எவ்வித தொடர்பையும் பேணவில்லை. ஜனவரி 8ஆம் நாளுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக எத்தகைய விமர்சனத்தைக் கொண்டிருந்தேனோ அதே  நிலையிலேயே தற்போதும் நான் உள்ளேன்’ என கடந்த மாதம் வழங்கிய உரையில் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

ராஜபக்சவிற்கு ஆதரவாக தமிழ் மற்றும் முஸ்லீம் மற்றும் இளம் சமூகத்தினர் தமது வாக்குகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் கட்சி ஈடுபடாது என மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.

தமிழ்ப் புலிகளுக்கு எதிரான யுத்தம் வெற்றி கொள்ளப்பட்ட பின்னர், சிங்கள மக்கள் மத்தியில் தான் ஒரு மீட்பராக ராஜபக்ச தன்னைத் தானே காண்பித்துள்ளார். ஆனாலும் நாட்டில் போருக்குப் பின்னான மீளிணக்கப்பாடு மிகவும் தாமதமாகவே இடம்பெற்றது.

அத்துடன் பௌத்த தேசியவாதக் குழுக்களுக்கு மகிந்த ராஜபக்ச இரகசியமாக ஆதரவு வழங்கினார் எனவும் குற்றம்சுமத்தப்பட்டுள்ளார். இந்தக் குழுக்கள் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுத்துள்ளன. அத்துடன் பள்ளிவாசல்களை அழித்துள்ளன. மூன்று முஸ்லீம்கள் கொல்லப்பட்ட போது பெரியதொரு கிளர்ச்சி உருவானது. முஸ்லீம்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கெல்லாம் பௌத்த தேசியவாதக் குழுக்களே காரணம் எனக் கூறப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து அரசாங்கத்தை உருவாக்குவதே தனது தனிப்பட்ட விருப்பு என சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார். ராஜபக்சவைத் தோற்கடித்த எதிரணியில் சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் இணைந்திருந்தனர்.

சிறிசேன தேர்தலில் வென்ற பின்னர், மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணையுமாறு கோரப்பட்டது. இதன் பின்னர் இவர் இந்த முன்னணியின் தலைவரானார். தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் மூலம் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் உள்ளார். இவருக்கு அடுத்த படியாகவே ராஜபக்ச உள்ளார்.

நாடு முழுவதும் வாழும் 1986 மக்களிடம் மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம், ராஜபக்சவுக்கு 27.5 சதவீதத்தினரும் விக்கிரமசிங்கவுக்கும் 39.8 சதவீதத்தினரும் தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

ராஜபக்ச இந்த இடைவெளியை ஆகஸ்ட் 17 இற்குள் நிரப்பாவிட்டால் இவர் நிச்சயமாக தேர்தலில் தோல்வியுறுவார்.

‘ராஜபக்ச தேர்தலில் தோல்வியுற்றால் இவர் தனிமைப்படுத்தப்பட்டு, அரசியலிலிருந்து ஓரங்கட்டப்படுவார் என நான் கருதுகிறேன். இவர் இதன் பின்னர் ஒரு தேவையற்ற ஒருவராகவே கருதப்படுவார்’ என பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *