மேலும்

சிறிலங்கா தேர்தல்: வெற்றி பெறப்போவது யார்? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

mahinda-Ranilசிறிலங்கா தேர்தல் வரலாற்றின் பிரகாரம், தோற்கடிக்கப்பட்ட எந்தத் தலைவர்களும் அல்லது தோற்கடிக்கப்பட்ட எந்தவொரு அரசாங்கமும் தோற்கடிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் மீண்டும் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்பதே உண்மையாகும்.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

1994ல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியுற்ற பின்னர், இதற்கு சில மாதங்களின் பின்னர் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் காமினி திசநாயக்க போட்டியிடத் தீர்மானித்தார். இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

காமினி முட்டாள்தனமான தீர்வை எடுத்ததாக பலர் சுட்டிக்காட்டினர். ஆனால் அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெறுவேன் என காமினி நம்பிக்கை கொண்டிருந்தார். காமினி செல்கின்ற இடமெல்லாம் மக்கள் ஒன்றுகூடினர்.

17 ஆண்டுகளாக சிறிலங்காவை ஆட்சி செய்து தோல்வியுற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களே காமினிக்குத் தமது ஆதரவை வழங்கினர். தோற்கடிக்கப்பட்ட கட்சியை அதிபர் தேர்தலில் காமினி வெற்றி பெறச் செய்வார் என ஐ.தே.க ஆதரவாளர்கள் கருதினர்.

இத்தோல்வியின் வலியே மக்கள் காமினியைச் சூழ்ந்து கொண்டதற்கான ஒரு காரணமாக இருக்கலாம். ‘ரவுடிகளைக்’ கைதுசெய்வதிலும் புதைகுழிகளைத் தோண்டுவதிலும் நேரத்தை வீணாக்கியது தவிர பொது ஜன ஐக்கிய முன்னணி வேறு எதைச் சாதித்துள்ளது என காமினி, மக்களிடம் வினவினார்.

தற்போது மைத்திரி மற்றும் மகிந்தவிற்கு இடையில் ஏற்பட்டுள்ள பிணக்குப் போன்றே காமினி மற்றும் ரணிலுக்கு இடையிலும் அப்போது முரண்பாடு ஏற்பட்டிருந்தது. காமினி – ரணில் பிணக்கின் போது ரணிலுக்கு ஆதரவு வழங்க விரும்பிய ஓசி அபேகுணசேகர பின்னர் காமினிக்கு தனது ஆதரவை வழங்கினார்.

இந்த நிலையானது, முதலில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் பின்னர் அவரைத் தனது கடவுளாகக் கருதி வணங்கிய ஜனக பண்டார தென்னக்கோனின் நிலைப்பாட்டிற்கு ஒத்ததாகும். காமினி மீண்டும் ஐ.தே.கவைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.இது சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

காமினியைச் சூழ்ந்து கொண்ட மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் மட்டுமே. சந்திரிகாவிற்கு எதிராக மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தியிருந்தார் காமினி. இவர் சந்திரிகாவின் ஒளிப்படங்களில் அவரது நெற்றியில் பொட்டு வைத்து அவமானப்படுத்தினார்.

சந்திரிகாவிற்கும் பிரபாகரனிற்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது நாட்டிற்குத் துரோகமிழைப்பதாகவும் காமினி அறிவித்தார். காமினி படுகொலை செய்யப்பட்ட பின்னர், காமினியால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மையானது என்பதை நம்பவைப்பதற்கு ஐ.தே.க முயற்சித்தது.

ஆனால் அதன் பின்னர் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் 62 சதவீத வாக்குகளால் சந்திரிகா வெற்றி பெற்றார். தோற்கடிக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் அல்லது தோற்கடிக்கப்பட்ட அதிபரை ஒரு சில மாதங்களிற்குள் மீளவும் தேர்ந்தெடுப்பதற்கு மக்கள் ஒருபோதும் முன்வருவதில்லை என்பதே இதற்கான காரணமாகும்.

1994 பொதுத்தேர்தலில், சந்திரிகா 48.94 சதவீத வாக்குகளைப் பெற்றார். ஆனால் இந்த வீதமானது அதிபர் தேர்தலில் 62 ஆக அதிகரித்தது. ஆனால் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்த வெற்றி பெறுவேன் என்கின்ற உளத் திடத்துடன் காணப்பட்ட ஐ.தே.க இத்தேர்தலில் 44.04 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. இதன் பின்னர் அதிபர் தேர்தலில் இந்தக் கட்சியானது 35.91 சதவீத வாக்குகளை மட்டுமே தனதாக்க முடிந்தது.

இதையொத்த மாற்றமானது 1988 அதிபர் தேர்தலிலும், 1989 பொதுத்தேர்தலிலும் ஏற்பட்டது. கிளர்ச்சியின் மத்தியிலும், பிறேமதாச, அதிபர் தேர்தலில் 50.43 சதவீத வாக்குகளைப் பெற்றார். திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க 44.95 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

1989 பொதுத் தேர்தல் இடம்பெற்ற போது கிளர்ச்சியானது மிகவும் குறைவாகக் காணப்பட்டது. திருமதி பண்டாரநாயக்க மற்றும் அவரது மகனான அனுரா ஆகியோர் தாம் பொதுத் தேர்தலில் வெற்றி பெற முடியும் எனக் கருதினர்.

ஆனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது இத்தேர்தலில் 31.8 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. இதில் ஐ.தே.க 50.7 சதவீத வாக்குகளைப் பெற்றது.

இதையொத்த நிலையே 2010ல் ஏற்பட்டது. 2010ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச 57.88 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். சரத் பொன்சேகா 40.15 வாக்குகளைப் பெற்றார். தனது கட்சியே இதில் வெற்றி பெறும் என ரணில் தப்புக் கணக்குப் போட்டிருந்தார்.

ஆனால் ஐ.தே.க 2010 அதிபர் தேர்தலில் 29.39 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. இதில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 60.33 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதிபர் தேர்தலுக்கும் பொதுத் தேர்தலுக்கும் இடையில் மூன்று மாத இடைவெளியே காணப்பட்டது.

1999ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரிகா பொதுத்தேர்தலைப் பிற்போடுவதெனத் தீர்மானித்தார். இதனால் இவர் தான் அதிபராக வெற்றி பெற்று ஒரு ஆண்டின் பின்னரே பொதுத்தேர்தலை நடத்தினார். இக்காலப்பகுதியில் ஐ.தே.க மக்கள் மத்தியில் தனக்கான ஆதரவை மீளப் பெற முடிந்தது.

இதன்பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆனையிறவு கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணத்தை புலிகள் வசம் இழக்கும் அபாயம் சந்திரிகாவிற்கு ஏற்பட்டது. வாழ்க்கைச் செலவு அதிகரித்தது. சந்திரிகாவால் சமாதானத்தைத் தொடர்ந்தும் நிலைநாட்ட முடியவில்லை.

அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் டிக்சன் ஜே.பெரேரா எதிர்க்கட்சிக்குத் தாவினார். சமாதான உடன்படிக்கை தோற்றுப் போனதால், சந்திரிகா நாடாளுமன்றைக் கலைத்தார். இதன்போது ஐ.தே.க கொழும்பில் தனக்கான ஆதரவாளர்களை மேலும் ஒன்றிணைத்தது.

எனினும் ஐ.தே.க பொதுத்தேர்தலில் தோல்வியுற்றது. சந்திரிகாவைக் கொல்வதற்கு ஐ.தே.க புலிகள் அமைப்புடன் இணைந்து சதி செய்வதாக மக்கள் நம்பினர். அதாவது கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில் சந்திரிகா தனது கண் ஒன்றை இழக்க நேரிட்டது. இது புலிகளுடன் ஐ.தே.க இணைந்து மேற்கொண்ட சதி என நம்பப்பட்டது.

இதனால் அந்த தேர்தலில் ரணில் 42.71 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இதன் பின்னர் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐ.தே.க 40.22 சதவீத வாக்குகளைத் தனதாக்கியது. சந்திரிகாவிற்கு அவரது இரண்டாவது ஆட்சிக்காலத்தில் மக்கள் தாம் வழங்கிய ஆணையை மாற்ற விரும்பவில்லை என்பதையே இத்தேர்தல் முடிவு வெளிப்படுத்தியது.

சிறிலங்காவின் தேர்தல் முறைமை தொடர்பாக சரியாக ஆராய்ந்தால், மகிந்த மீண்டும் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவார் என்பது கடினமான செயலாகும். இந்த நாட்டு மக்கள் கடந்த ஜனவரியில் புதிய அதிபரை மட்டும் தேர்ந்தெடுக்கவில்லை, புதிய அரசாங்கத்தையும் தேர்ந்தெடுத்தனர்.

மைத்திரி தேர்தலில் வெற்றி பெற்றால் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என ‘அன்னம்’ கூட்டணி தெரிவித்துள்ளது. மக்கள் ‘அன்னம்’ சின்னத்திற்கு தமது வாக்குகளை வழங்கியிருந்தனர். ஆகவே இந்த அரசாங்கத்தை மாற்றுவதற்கு மக்கள் இவ்வளவு விரைவாகக் கருதுவார்கள் என எடைபோட முடியாது.

1989ல் திருமதி பண்டாரநாயக்க, 1994ல் காமினி மற்றும் 2010ல் ரணில் ஆகியோர் உணர்ந்த அதே தேர்தல் ‘காய்ச்சலையே’ தற்போது மகிந்தவும் உணர்கிறார் எனக் கூறமுடியும்.

ஒரு ஆண்டுகாலம் பிரதமராகவும் இரண்டு தடவைகள் தொடர்ச்சியாக அதிபராகவும் பணியாற்றிய மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமரானால் நாட்டில் என்ன நடக்கும் என்பதை மக்கள் ஊகிக்கத் தவறவில்லை.

மூன்றாவது தடவையாகவும் மகிந்த அதிபராவதை இந்த மக்கள் தடுத்துள்ளனர். இரண்டு தடவைகள் அதிபராக இருந்தது போதும் எனக் கூறி மக்கள் அவரை வீட்டிற்கு அனுப்பினார்கள்.

தற்போது மகிந்த மக்களின் ஆணைக்கமைய வீட்டிற்குச் செல்லாது அடுத்த பிரதமராக முயற்சிக்கிறார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு சாரார் மகிந்த மீண்டும் ஆட்சிபீடம் ஏறவேண்டும் எனக் கோருகின்றனர்.

சிறிலங்கா தேர்தல் வரலாற்றின் பிரகாரம், தோற்கடிக்கப்பட்ட எந்தத் தலைவர்களும் அல்லது தோற்கடிக்கப்பட்ட எந்தவொரு அரசாங்கமும் தோற்கடிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் மீண்டும் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்பதே உண்மையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *