மேலும்

மகிந்த பிரதமரானால் சிறிலங்காவின் நிலைமைகள் சிக்கலடையும் – யதீந்திரா

jathiமகிந்த ராஜபக்ச பிரதமரானால் சிறிலங்காவின் அரசியல் நிலைமைகள் நிச்சயம் சிக்கலடையும். அதனைக் கருத்தில் கொண்டு தான் தமிழ்மக்கள்  செயலாற்ற வேண்டியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக, திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும், அரசியல் ஆய்வாளரான யதீந்திரா தெரிவித்துள்ளார்.

திருகோணமலை கிராமிய அபிவிருத்தி சங்கங்களின் தலைவர்களை நேற்றுச் சந்தித்து பேசியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

ஆட்சி மாற்றம் குறித்து நாம் எல்லோரும் பேசி வருகின்றோம் ஆனால் ஆட்சி மாற்றம் என்று சொல்லப்படும் விவகாரம் இன்னும் முழுமையடையவில்லை என்பதே எனது அபிப்பிராயம்.

எதிர்வரும் 17ஆம் நாள், இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின் பின்னர்தான் இந்த மாற்றத்தின் எதிர்காலம் தொடர்பில் நாம் சிந்திக்கலாம். இதன் காரணமாகவே இதனை ஒரு முக்கிய தேர்தலாக கூட்டமைப்பு கருதுகிறது.

ஆட்சி மாற்றம் என்பது சிலர் மேடைகளில் பேசுவது போன்று இலகுவாக நிகழ்ந்த ஒன்றல்ல. சில பலம்பொருந்திய சக்திகளின் திரைமறைவு வேலைத்திட்டங்கள் இல்லாமல் இப்படியொரு ஆட்சி மாற்றம் ஒரு போதுமே நிகழ்ந்திருக்க முடியாது.

தெற்கில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து களமிறங்குவதற்கு எவரும் இல்லாதவொரு சூழலில்தான் அதுவரை மகிந்தவின் வேலைத்திட்டங்களுக்கு மிகவும் ஒத்தாசையாக இருந்த மைத்திரிபால சிறிசேன அவருக்கு எதிராக களமிறங்க முன்வந்தார்.

இது ஒரு பலமான பின்தளம் இல்லாமல் ஒருபோதும் சாத்தியப்பட்டிருக்க முடியாது. இதனை இன்னொரு வகையில் சொல்வதானால் அதுவரை மகிந்தவின் முன்னால் ஒரு பூனைக்குட்டியாக அடங்கிக் கிடந்த மைத்திரிபால சிறிசேன ஒரு புலியாக ஆக்கப்பட்டார்.

ஒரு திரைமறைவு வேலைத்திட்டம் இல்லாமல் இது ஒரு போதுமே சாத்தியப்பட்டிருக்க முடியாது. பலரது திரைமறைவு செயற்பாடுகள் வெற்றிபெற்ற போதிலும் கூட அந்த வெற்றி இன்னும் முழுமையடையவில்லை.

இந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் தான் ஆட்சி மாற்றத்தின் முழுமை தங்கியிருக்கிறது.

மகிந்த ராஜபக்ச மீண்டும் தேர்தலில் போட்டிடுவதால் இந்த தேர்தல் அதிக எதிர்பார்ப்புடன் உற்று நோக்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் இப்போதைக்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது.

ஆனால் மகிந்த ராஜபக்ச எதிர்பார்ப்பது போன்று அவ்வளவு சுலபமாக மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற முடியுமா என்பது கேள்விக்குறியே.

அப்படி ஒரு வேளை ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிக ஆசனங்களை வெற்றி கொண்டு, மகிந்த பிரதமரானால் சிறிலங்காவின் அரசியல் நிலைமைகள் நிச்சயம் சிக்கலடையும்.

இப்படியான பல விடயங்களை கருத்தில் கொண்டுதான் நாங்கள் செயலாற்ற வேண்டியுள்ளது. தெற்கில் எதுவும் நிகழட்டும் ஆனால் நாங்கள் எங்களுடைய ஜனநாயக பலத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் அது ஒன்றுதான் இன்றைய சூழலில் எங்களிடம் இருக்கின்ற ஒரேயொரு பலம்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *