பொதுவாக்கெடுப்பு நடத்துவதில் இருந்து பின்வாங்கும் சிறிலங்கா அரசாங்கம்
ஊழல் ஒழிப்பு திருத்த சட்டமூலத்தின் 17-வது பிரிவுக்கு மக்கள் ஒப்புதல் தேவை என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ள நிலையில், அது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தும் எண்ணம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு இணங்க, சட்டமூலத்தின் ஏனைய பிரிவுகளை நாடாளுமன்றத்தில் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற அரசாங்கம் முற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஊழல் ஒழிப்பு திருத்த சட்டமூலம் மீதான விவாதம் ஒக்டோபர் 8-ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நடைபெறும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.
சட்டமூலத்தின் 17-வது பிரிவு, குழு நிலையில் நீக்கப்படுமா அல்லது திருத்தப்படுமா என்று கேட்கப்பட்டபோது, அரசாங்கம் அந்தப் பிரிவை நீக்கும் அல்லது திருத்தும் என்றும் அமைச்சர் பதிலளித்தார்.
பிரிவு 17 அரசியலமைப்பின் 4(c) பிரிவுக்கு முரணானது என்றும், எனவே இதற்கு 84(2) பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்புப் பெரும்பான்மையும், அத்துடன் 83-வது பிரிவின் கீழ் ஒரு பொது வாக்கெடுப்பில் மக்களின் ஒப்புதலும் தேவை என்றும் உயர்நீதிமன்றம் தீர்மானித்தது.
