இந்திய, சிறிலங்கா போதைப்பொருள் கட்டுப்பாட்டு முகமைகள் இடையே பேச்சு
இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்திற்கும் சிறிலங்கா காவல்துறை போதைப்பொருள் பணியகத்திற்கும் இடையேயான ஐந்தாவது பணிப்பாளர் நாயகம் நிலை பேச்சுக்கள் கொழும்பில் நடைபெற்றுள்ளது.
இதில் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்தல், கூட்டு நடவடிக்கைகள் மற்றும் தப்பியோடியவர்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியக் குழுவிற்கு இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் (தெற்குப் பிராந்தியம்) ஆர். சுதாகரும், சிறிலங்கா குழுவிற்கு காவல்துறை போதைப்பொருள் பணியகத்தின் தலைவர் கே.டி.ஜி.எல். அசோக தர்மசேனவும் தலைமை தாங்கினர்.
சிறிலங்கா காவல்துறைத் தலைவர் பிரியந்த வீரசூரிய, செப்ரெம்பர் 23ஆம் நாள் இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கி வைத்தார்.
கடல்வழி கடத்தல் போக்குகள், புலனாய்வுத் தகவல்களைப் பகிர்தல், கூட்டு நடவடிக்கைகள், தப்பியோடியவர்கள் மற்றும் கடலோரப் பாதுகாப்பு ஆகியவை குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்திய கடலோரக் காவல்படை, வெளியுறவு அமைச்சு மற்றும் தமிழக காவல்துறை ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.
அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளைக் கண்டறிதல், சீர்குலைத்தல் மற்றும் தகர்த்தல் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர்.
முன்னதாக, இந்தியாவின் பிரிக்ஸ் 2026 தலைமைத்துவத்தின் கீழ், கடந்த ஜூலை மாதம் குவஹாத்தியில் நடைபெற்ற இரண்டு நாள் பிரிக்ஸ்போதைப்பொருள் தடுப்பு முகமைகளின் தலைவர்கள் கூட்டத்தில்,அனைத்துலக போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராக நிகழ்நேர உளவுத் தகவல்களைப் பகிர்வதற்கும், ஒருங்கிணைந்த அமுலாக்கத்தை மேற்கொள்வதற்கும் ஒரு பிரிக்ஸ் மெய்நிகர் பணிக்குழுவை உருவாக்க இந்தியா முன்மொழிந்தது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் எனும் வளர்ந்து வரும் உலகளாவிய சவாலுக்கு எதிரான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, இந்த உயர்மட்டக் கூட்டம் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் போதைப்பொருள் தடுப்பு முகமைகளின் தலைவர்களையும் மூத்த அதிகாரிகளையும் ஒன்றிணைத்தது.
தொடக்க அமர்வில் உரையாற்றிய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் தலைமை இயக்குநர் அனுராக் கார்க், பிரிக்ஸ் போதைப்பொருள் சட்ட அமலாக்க முகமைகளை, தேசிய எல்லைகளைக் கடந்து, ஒழுங்கமைக்கப்பட்ட அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு எதிராக விரைவான நடவடிக்கையை மேற்கொள்ள உதவும் வகையில், வேகம், நம்பிக்கை மற்றும் தடையற்ற நிகழ்நேர உளவுத் தகவல்களைப் பகிர்தல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு கூட்டாண்மையை உருவாக்குமாறு வலியுறுத்தினார்.
அனைத்துலக போதைப்பொருள் கும்பல்களின் அதிகரித்து வரும் நுட்பமான செயல்பாடுகள், பிரிக்ஸ் நாடுகளிடையே அதிக ஒருங்கிணைப்பு, வேகமான தகவல் பரிமாற்றம் மற்றும் வலுவான செயல்பாட்டு ஒத்துழைப்பை அவசியமாக்குகின்றன என்று அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் தலைமையிலான இந்தியாவின் போதைப்பொருள் ஒழிப்பு உத்தியை எடுத்துரைத்த கார்க், போதைப்பொருட்களுக்கு எதிரான நாட்டின் சகிப்புத்தன்மையற்ற கொள்கையை மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும், வலையமைப்பை மையமாகக் கொண்ட அமலாக்க அணுகுமுறையின் அடிப்படையில், 2026-29 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மூன்றாண்டு செயல்திட்டத்தையும் அவர் கோடிட்டுக் காட்டினார்.
இந்த உத்தியானது, தனிப்பட்ட குற்றவாளிகளைக் குறிவைப்பதற்குப் பதிலாக முழுமையான குற்ற வலையமைப்புகளைத் தகர்ப்பது, பெரிய அளவிலான விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மூலம் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைத் தடுப்பது, மற்றும் சிகிச்சை, போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு வழிமுறைகளை வலுப்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

