மேலும்

உடன்பாடு எட்டப்படாமல் திரும்பிச் சென்றது ஐஎம்எவ் குழு

கொழும்பில் இரண்டு வார கால பேச்சுக்களை நடத்திய அனைத்துலக நாணய நிதியத்தின் குழு, மீட்புத் திட்டத்தின் அடுத்தகட்ட ஆய்வு குறித்து எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாமல்  சிறிலங்காவில் இருந்து திரும்பியுள்ளது.

செப்ரெம்பர் 10ஆம் நாள் முதல் 23 நாள் வரை சிறிலங்காவில் பயணம் மேற்கொண்ட இந்தக்குழு, ஏழாவது ஆய்வு குறித்த பணியாளர் மட்டத்திலான உடன்பாட்டை எட்டத் தவறியுள்ளதாக அறிவித்துள்ளது.

இதனால்  பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடரும் என்று அனைத்துலக நாணய நிதியம் கூறியுள்ளது.

ஆய்வின் காலக்கெடுவும், அதை நிறைவு செய்வதற்கான நிதியுதவியும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

2027ஆம் ஆண்டுக்கான பாதீடு குறித்த கலந்துரையாடல்கள் உட்பட, தொழில்நுட்பச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு இரு தரப்பினருக்கும் கூடுதல் அவகாசம் தேவை என்று சிறிலங்காவுக்கான அனைத்துலக  நாணய நிதியக் குழுவின் தலைவர் எவன் பாப்பஜார்ஜியோ தெரிவித்துள்ளார்.

அடுத்தகட்ட நிதி வழங்கல் தாமதமாகும் அபாயம் உள்ளதா என்று கேட்டதற்கு, அவர் உறுதியான கால அட்டவணையை வழங்கவில்லை.

“எதுவும் தாமதமாகாது என நம்புகிறோம்,” என்று கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறிய அவர், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளை கூடிய விரைவில் முடிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

நிதி வழங்குவதில் தாமதம் ஏற்படும் என அனைத்துலக நாணய நிதியம் கூறவில்லை, ஆனால் பணியாளர் மட்டத்திலான உடன்பாடு இல்லாமல், நிதியுதவி விடுவிக்கப்படுவதற்கு முன்னர் தேவைப்படும்,  செயற்குழுவின் ஒப்புதலுக்கு இந்த மீளாய்வு செல்ல முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *