மேலும்

22வது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது

உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நோக்கிலான, அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலம்,  மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் ஆகியன  இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இவற்றை இன்று நாடாளுமன்றில் முதலாவது வாசிப்பிற்காக சமர்ப்பித்துள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தம், உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆண்டுகளில் இருந்து 67 ஆண்டுகளாகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆண்டுகளில் இருந்து 65 ஆண்டுகளாகவும் உயர்த்த முன்மொழிகிறது.

அதேவேளை, நீதித்துறை திருத்தச் சட்டமூலம், கீழ் நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதில் மாற்றங்களை முன்மொழிகிறது.

இந்த சட்டமூலங்களை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 14 நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடியும்.

இந்தச் சட்டமூலங்கள் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *