18ஆம் நாள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகிறது 22வது திருத்தச் சட்டமூலம்
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சிறிலங்காவின் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கான 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை சிறிலங்கா அரசாங்கம் கடந்த 7ஆம் நாள் அரசிதழில் வெளியிடப்பட்டது.
இந்த திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
இதற்கு இணையாக நீதிமன்ற ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலமும் அன்றைய நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
சிறிலங்காவில் நாடாளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு, அதை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கு அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 14 நாள்கள் காலஅவகாசம் வழங்கப்படும்.
அந்த மனுவை விசாரித்து 3 முதல் 21 நாட்களுக்குள் உயர்நீதிமன்றம் தனது தீர்மானத்தை நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
