மேலும்

இந்தியத் திட்டங்களை கையாள சிறிலங்கா அதிபர் செயலகத்தில் தனிப்பிரிவு

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து  சிறிலங்காவும் இந்தியாவும் நேற்றுக் கலந்துரையாடியுள்ளன.

தொழில்அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடைபெற்றது.

இந்திய நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் உள்கட்டமைப்புத் திட்டங்களில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் அவற்றைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாக சிறிலங்கா அதிபர் செயலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்குத் தேவையான உடன்பாடுகளைப் புதுப்பிப்பது குறித்தும்  சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்தத் திட்டங்கள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி; துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து; தோட்டப்பயிர்கள் மற்றும் சமூக உள்கட்டமைப்பு; வீட்டுவசதி கட்டுமானம் மற்றும் நீர்வழங்கல்; மீன்வளம், நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள்; விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம்; மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு உள்ளிட்ட பல்வேறு அமைச்சுக்கள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

பேரிடர் மீட்பு மற்றும் புனரமைப்புக்காக இந்தியா வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் மற்றும் மானிய உதவியின் மூலம் நிதியளிக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இந்திய நிதியுதவித் திட்டங்களின் முன்னேற்றத்தை மேற்பார்வையிடவும் கண்காணிக்கவும் சிறிலங்கா அதிபர்  செயலகத்தில் ஒரு தனிப் பிரிவை நிறுவுவது குறித்தும் அதிகாரிகள் கலந்துரையாடியுள்ளனர்.

அதிபர் செயலகம், நிதி அமைச்சு மற்றும் பிற தொடர்புடைய அமைச்சுக்களின் மூத்த அதிகாரிகளும், இந்திய தூதரகப் பிரதிநிதிகளும் இந்த கலந்துரையாடல்களில்  பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *