ஈரானிய கடற்படைக் கப்பலை திருகோணமலை கொண்டு செல்லும் பணி ஆரம்பம்
சிறிலங்காவின் மேற்குக் கடற்கரையில் நங்கூரமிடப்பட்டிருந்த ஈரானிய கடற்படையின் விநியோக கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேர், இழுவைப் படகின் உதவியுடன் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பணிக்காக உடன்பாடு செய்யப்பட்ட ஒரு தனியார் மீட்பு இழுவைப் படகின் உதவியுடன், ஐஆர்ஐஎஸ் புஷேர் திருகோணமலை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியுள்ளதாக, தமது பெயரை வெளிப்படுத்த விரும்பாத, தொடர்புடைய உயர்மட்ட அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
“கப்பலை இழுத்துச் செல்லும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது, அது மெதுவாக இடம்பெற்று வருகிறது.
இந்தப்பணியைத் தொடங்குவதற்கு முன்னர், சில தொழில்நுட்பச் சிக்கல்களும் நடைமுறைப் பிரச்சினைகளும் இருந்தன, அவற்றைச் சரிசெய்ய வேண்டியிருந்தது.
அதனால்தான், இந்தப்பணி தொடங்க இவ்வளவு காலம் ஆனது.இருப்பினும், தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன,” என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவிற்குத் தெற்கே அமெரிக்கக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பலால், ஐஆர்ஐஎஸ் டேனா என்ற ஈரானியப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 3,300 தொன் எடையும் 108 மீட்டர் நீளமும் கொண்ட, ஜெர்மனியில் கட்டப்பட்ட புஷேர் என்ற விநியோக கப்பல், மார்ச் 4 ஆம் நாள் இரவு கொழும்புத் துறைமுகத்தில் அவசரமாகத் தஞ்சம் புகுந்தது.
அந்தக் கப்பலில் இருந்த 200-க்கும் மேற்பட்ட ஈரானிய மாலுமிகளும் கடற்படை பயிலுநர்களும் மார்ச் மாதம் கரைக்குக் கொண்டு வரப்பட்டு, சிறிலங்கா படைத் தளங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
