கைதில் இருந்து தப்ப நீதிமன்றுக்கு ஓடும் சிறிலங்காவின் முன்னாள் படைத் தளபதிகள்
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, கைது செய்யப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி சிறிலங்கா இராணுவ மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் இரண்டு பேர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, தகுந்த காரணமின்றி தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்க கோரி, மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தர மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
காவல்துறை மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதி வாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வரும் 15ஆம் திகதி விசாரணைகளை முன்னெடுக்க நீதியரசர்கள் தீர்மானித்தனர்.
எனினும், மனுதாரர் தரப்பு, முன்கூட்டியே விசாரணையை நடத்தக் கோரியதை அடுத்து நாளை மறுநாள், விசாரணைக்கு எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக கைது செய்யப்படுவதில் இருந்து, தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரி கேணல் கெலும் மத்துமகேயும் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான சட்டவாளர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் வரும் 22ஆம் நாளுக்கு, நீதியரசர்கள் விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.
