சுரேஷ் சாலேயை பரிசோதிக்க 5 மருத்துவர்களைக் கொண்ட குழு நியமனம்
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் சிறிலங்கா அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சாலே, ஏதேனும் துன்புறுத்தலுக்கோ அல்லது சித்திரவதைக்கோ உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பதை ஆய்வு செய்ய மருத்துவர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மூன்று சிறப்பு மனநல மருத்துவர்கள் மற்றும் இரண்டு சட்ட மருத்துவ அதிகாரிகள் அடங்கிய ஐந்து பேர் கொண்ட இந்த நிபுணர் குழு, இதுதொடர்பாக ஆய்வு செய்த பின்னர், ஜூலை 1-ஆம் நாள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன இன்று உத்தரவிட்டுள்ளார்.
தடுப்புக்காவலில் உள்ள சுரேஷ் சாலே துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உறவினர்களும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இதுகுறித்து ஆராய ஒரு மருத்துவக் குழுவை நியமிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த பிரதி சொலிசிற்றர் ஜெனரல் திலீப பீரிஸ், நீதிமன்றில் கோரியிருந்தார்.
இதற்கமையவே, கோட்டை நீதிவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சுரேஷ் சாலே தடுத்து வைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று முன்தினம் கோட்டை தொடருந்து நிலையத்தின் முன்பாக சில எதிர்க்கட்சி உறுப்பினர்களால் தொடங்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று கைவிடப்பட்டுள்ளது.
முதல் இரண்டு நாட்களும் குறிப்பிடத்தக்களவானோர் இதில் பங்கேற்றிருந்த போதும் இன்று காலை குறைந்தளவிலானோரே கலந்து கொண்டதால், மதியத்துடன் போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
