ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சரும் கொழும்பு வருகிறார்
ரஷ்ய வெளியுறவு பிரதி அமைச்சர் அண்ட்ரே ருடென்கோ நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர, பொருளாதார மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மதிப்பீடு செய்து வலுப்படுத்துவதற்கான நடத்தப்படும், 11வது சுற்று இருதரப்பு அரசியல் கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக, அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தக் கலந்துரையாடல்கள், இரு நாடுகளிலும், மாறி மாறி சந்திப்புகள் நடத்தப்பட்டு வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பொது இராஜதந்திரப் பணிப்பாளர் நாயகம் துஷாரா ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடல்கள், ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் மட்டும் கவனம் செலுத்தாமல், பரந்த அளவிலான துறைகளை உள்ளடக்கிய விரிவான நோக்கத்தைக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் கடந்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, அதிபர் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
அவர், தனது சிறிலங்கா பயணத்தை நேற்று நிறைவு செய்த நிலையில், ரஷ்யாவின் வெளியுறவு பிரதி அமைச்சர் அண்ட்ரே ருடென்கோ நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
