மேலும்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்துக்கு தென்கொரியாவில் விருது

சிறிலங்காவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம், தென்கொரியாவில் குவாங்ஜூ மனித உரிமை விருது (Gwangju Prize for Human Rights) வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்குப் பகுதிகளில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் அன்புக்குரியவர்களுக்காக உண்மையையும் நீதியையும் கோரி, அவர்களின் உறவுகள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.

இந்தத் தொடர் போராட்டத்திற்கு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் தலைமை தாங்கி வருகிறது.

இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவம், நியாயம் மற்றும் விடாமுயற்சியை அங்கீகரித்து, தென்கொரிய மனித அமைப்பு தனது 2026 ஆம் ஆண்டிற்கான அனைத்துலக குவாங்ஜூ மனித உரிமை விருதுக்கு  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தை தேர்ந்தெடுத்துள்ளது.

மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட இந்தத் தேர்வு செயல்முறையில்,   மொத்தம் 17 அமைப்புகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்  அமைப்பின் செயலாளர் லீலாதேவி ஆனந்தராஜாவும்,  சங்கத்தின் பிரதிநிதியான மற்றொரு தாயாலும்,  மார்ச் 11 ஆம் நாள் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக தென் கொரியாவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

அவர்களிடம் வழங்கப்பட்ட விருதுப் பதக்கத்தில், “இருள் ஒருபோதும் ஒளியை வெல்வதில்லை; நீதி மற்றும் அமைதிக்கான தியாகமும் முயற்சியும் என்றும் பிரகாசித்து மேலோங்கும். நீடித்த ஒற்றுமையுடன் நாம் ஒன்றிணைந்து நடப்போம்” என்று பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் ஏற்புரையாற்றிய லீலாதேவி ஆனந்தராஜா, சுட்டெரிக்கும் வெயிலிலும் கனமழையிலும் தங்கள் மகன்கள் மற்றும் மகள்களின் புகைப்படங்களை ஏந்தியபடி, நினைவுகள் அழிக்கப்படுவதை அனுமதிக்க மறுத்துப் போராடும் தாய்மார்களுக்கே இந்த விருது உரியது என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *