மேலும்

மின் உற்பத்திக்கான எரிபொருளை இந்தியாவிடம் கோரியது சிறிலங்கா

மின் உற்பத்திக்குத் தேவையான டீசல் மற்றும் உலை எண்ணெய் ஆகியவற்றை  வழங்குமாறு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக  உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போதைய நிலவரம் குறித்து சிறிலங்கா அதிபர் அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடியபோதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் மின் உற்பத்திக்குத் தேவையான இந்த எரிபொருளை வழங்குவதற்கான கோரிக்கையை இந்திய அதிகாரிகள் தற்போது பரிசீலித்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது லங்கா ஐஓசி நிறுவனம் மூலம் இன்று இந்தியா வழங்கவிருக்கும் 38,000 மெட்ரிக் தொன் எரிபொருளுக்கு மேலதிகமாக விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையாகும்.

இந்த எரிபொருள், ஐஓசி நிறுவனத்தின் பாராதீப் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2016ஆம் ஆண்டில் செயற்பாட்டிற்கு வந்த இந்த நிலையம், ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜகத்சிங்பூர் மாவட்டத்தின் பாராதீப்பில் அமைந்துள்ளது.

சிறிலங்காவில் வணிக நடவடிக்கைகளுக்கான எரிபொருளை லங்கா ஐஓசி நிறுவனம், மத்திய கிழக்கு அல்லது சிங்கப்பூரில் உள்ள வழங்குநர்களிடம் இருந்தே கொள்வனவு செய்கிறது.

ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கிலிருந்து வரும் எண்ணெய் விநியோகம் தற்போது தடைப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, அவசரத் தேவையின் பேரில், இந்தியாவில் உள்ள அதன் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து டீசல் மற்றும் பெட்ரோல் பெறப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் எரிபொருள் வர்த்தகத்தில் நான்கில் ஒரு பங்கை, லங்க ஐஓசி கையாளுகிறது.

இதற்கிடையே, எரிபொருள் களஞ்சியப்படுத்தல் வசதியை அதிகரிக்க, திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *