றீகனின் தூதுவரால் முடியாததை ட்ரம்பின் தூதுவர் சாதிப்பாரா?
1977ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜயவர்த்தன பதவியேற்றதைத் தொடர்ந்து, முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் றீகன், தனது சிறப்புத் தூதுவர் வேர்னோன் வோல்டர்ஸை (Vernon Walters) சிறிலங்காவுக்கு அனுப்பினார்.
இந்திய ஊடகங்கள் அவரது பயணத்தை “அமெரிக்கா சிறிலங்காவில் மேலும் ஆழமாக ஊடுருவுகிறது” என்று வர்ணித்தன.
அந்தக் காலத்தில், சோவியத் கூட்டமைப்புடன் அணிசேர்ந்திருந்த இந்தியா, சிறிலங்காவில் அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகத்தை நிறுவுவதற்கான அமெரிக்காவின் முயற்சியாகவே அந்தப் பயணத்தைப் புரிந்து கொண்டது.
திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளம் நிறுவப்பட்ட பின்னர், அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) சிறிலங்காவில் அமைக்கப்படும் என்று, சோவியத் புலனாய்வுத்துறை இந்தியாவிற்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த புலனாய்வு மற்றும் சோவியத் ஆலோசனையின் பேரில், இந்தியா வடக்கில் உள்ள தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு ஆதரவளிக்கத் தொடங்கியது.
அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகத்தின் பொறுப்புப் பகுதி (AOR) மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் தெற்காசியாவை உள்ளடக்கியது.
ஈராக் போர், ஆப்கானிஸ்தான் போர் மற்றும் தற்போதைய ஈரான் மோதல் ஆகியவை இதன் கட்டுப்பாட்டுப் பரப்பின் கீழேயே வருகின்றன.
1980-களில் றீகனின் சிறப்புத் தூதுவராக வேர்னோன் வோல்டர்ஸ் மேற்கொண்ட பயணத்தை நினைவுகூரும் வகையில், டொனால்ட் ட்ரம்பின் சிறப்புத் தூதுவர் செர்ஜியோ கோர் கடந்த வாரம் சிறிலங்காவுக்கு வருகை தந்தார்.
இவர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான ட்ரம்பின் சிறப்புத் தூதுவர் ஆவார்.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்த பின்னர், அவர் கொழும்பு துறைமுகத்தைப் பார்வையிட்டார்.
அவர் துறைமுகத்தில் உள்ள வழிகாட்டல் நிலையத்தைப் பார்வையிட்டு, சுற்றியுள்ள கடல் பகுதியையும் கவனித்தார்.
ஈரான் மோதலுக்கு மத்தியில், சிறிலங்காவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நேரத்தில், அவரது பயணம் நடைபெற்றது.
ஈரான் மோதலால், சிறிலங்காவில் அமெரிக்காவின் ஈடுபாடு அதிகரித்துள்ளது என்பது தெளிவாகிறது.
டியாகோ கார்சியாவில் உள்ள அமெரிக்க மற்றும் பிரித்தானிய கடற்படைத் தளம் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. இருப்பினும் ஈரான் இதை மறுத்துள்ளது.
1970 முதல் 1977 வரையிலான காலகட்டத்தில், சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கமும் இந்திரா காந்தியின் அரசாங்கமும், டியாகோ கார்சியாவில் இருந்த அமெரிக்க மற்றும் பிரித்தானிய கடற்படைத் தளத்தை அகற்றுவதற்கும், இந்தியப் பெருங்கடலை அமைதி வலயமாக அறிவிப்பதற்கும் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டன.
இந்தியா மற்றும் சிறிலங்கா ஆகிய இரு அரசாங்கங்களும் தோற்கடிக்கப்பட்ட பின்னரே, றீகனின் சிறப்புத் தூதுவர் சிறிலங்காவுக்கு பயணம் செய்தார்.
திருகோணமலையில் ஒரு கடற்படைத் தளத்தை நிறுவுவதற்கான வேர்னோனின் முயற்சி தோல்வியடைந்த போதிலும், அமெரிக்கா பின்னர் டியாகோ கார்சியாவில் தனது இருப்பை வலுப்படுத்தியது.
செர்ஜியோ கோரின் சிறிலங்கா பயணம், வேர்னோனின் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைக் குறிக்கிறதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஆங்கிலத்தில்- உபுல் ஜோசப் பெர்னான்டோ
வழிமூலம்- மவ்ரட்ட நியூஸ்
