கோட்டாவுக்கு ஏற்பட்ட கதி அனுரவுக்கும் ஏற்படுமா?
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபரான பின்னர், கோட்டாபய ராஜபக்ச சிறிலங்கா அதிபரானார். அனுரகுமார திசாநாயக்க அதிபரான பின்னர், டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக அதிபரானார்.
டொனால்ட் ட்ரம்ப் மிகவும் துரதிஷ்டமான தலைவர். தனது தனது முதல் பதவிக்காலத்தில் அவர் எந்த பெரிய சாதனைகளையும் நிரூபிக்க முடியவில்லை.
காரணம், 2020 இல் கோவிட் 19 தொற்றுநோய் வந்தது. அவர் தொற்றுநோயை திறம்பட கட்டுப்படுத்தத் தவறிவிட்டார்.
அந்தக் காலகட்டத்தில் அமெரிக்கா ஒரு பொருளாதார நெருக்கடியில் சிக்கியது.
2021 இல், ட்ரம்ப் கூட எதிர்பார்க்காத தோல்வியைச் சந்தித்தார். ஏனெனில் தொற்றுநோயால் சோர்வடைந்த அமெரிக்கர்கள் அவரை ஒரு தோல்வியுற்ற தலைவராகக் கருதினர்.
இப்போது, அவரது இரண்டாவது பதவிக்காலத்தில், ட்ரம்ப் ஈரானுடனான போரில் சிக்கிக் கொண்டுள்ளார்.
இது அமெரிக்க பொருளாதாரத்தை மட்டுமல்ல, உலகப் பொருளாதாரத்தையும் நெருக்கடியை நோக்கித் தள்ளியுள்ளது.
உலகத் தலைவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அதிர்ச்சியடைந்தது போல, இப்போது ட்ரம்ப்-ஈரான் போரால் அவர்கள் பீதியடைந்துள்ளனர்.
காரணம், அத்தகைய போரின் பொருளாதார வீழ்ச்சி தங்கள் நாடுகளின் பொருளாதாரங்களை சேதப்படுத்தி, அடுத்த தேர்தல்களில் அவர்களின் தோல்விக்கு வழிவகுக்குமோ என்ற அச்சமே ஆகும்.
ட்ரம்பிடம் துணிச்சல் இருந்தபோதிலும், அவரும் இப்போது அந்த பயத்தை உணர்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
சிறிலங்காவின் வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்று – 69 சதவீதம் – அதிபரான கோட்டாபய ராஜபக்ச, இறுதியில் கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக, அதிபர் பதவியை மட்டுமல்ல, நாட்டையும் விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தொற்றுநோய் காரணமாக, சிறிலங்கா வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இழந்தது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து வரும் டொலர்கள் குறைந்தன. ஏற்றுமதி வருவாயும் குறைந்தது.
இதன் விளைவாக, சிறிலங்காவில் அதன் ஆண்டுத் கடன் தவணைகளை திருப்பிச் செலுத்தத் தேவையான வெளிநாட்டு இருப்புக்கள் இல்லை.
எரிபொருள் அல்லது எரிவாயுவை இறக்குமதி செய்ய டொலர்கள் இல்லை.
இதனால், கோட்டாபய சிறிலங்காவை வங்குரோத்தாகியதாக அறிவிக்க வேண்டியிருந்தது.
அவர் பதவியை விட்டு வெளியேறியபோது, 69 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் புகழ் மூன்று சதவீதத்திற்கும் குறைவாகவே சரிந்தது.
கோட்டாபய 2019 இல் ஒரு பெரிய ஆதரவு அலையால் அதிபரானார்.
அந்த அலை சிறிலங்காவில் உள்ள இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளான, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஒதுக்கித் தள்ளியது.
அவரது வெற்றிக்குப் பின்னர், ராஜபக்ச குடும்பம் நாட்டை மேலும் 25 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யும் என்று பலர் நம்பினர்.
69 சதவீத மக்கள் அவருக்கு வாக்களித்த போதிலும், கோட்டாபயவுக்கு ஒரு நாட்டை நிர்வகிப்பதில் அனுபவம் இல்லை என்பதை அவர்கள் உணரவில்லை.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஏற்படவில்லை என்றால், கோட்டாபய இன்றும் அதிபராக இருந்திருக்கலாம்.
சாதாரண சூழ்நிலையில், அமைப்பை இயக்குவதற்கு, அவர் அசாதாரணமாக எதையும் செய்ய வேண்டியதில்லை.
சுற்றுலா, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஏற்றுமதிகளில் இருந்து வழக்கமான டொலர்கள் வரத்து தொடர்ந்திருந்தால், நாட்டை நிர்வகிப்பது கடினமாக இருக்காது.
ஆனால் தொற்றுநோயுடன் விதி தலையிட்டது. நாடு ஒரு அசாதாரண சூழ்நிலைக்குள் நுழைந்தது. அத்தகைய அசாதாரண சூழ்நிலையில் ஆட்சி செய்யத் தேவையான அனுபவம் கோட்டாபயவுக்கு இல்லை.
எல்லாம் தவறாகி விட்டது, இறுதியில் அவர் உணரும் முன்பே நாடு சரிந்தது.
கோட்டாபயவைப் போலவே அனுரவும் சிறிலங்கா அதிபரானார்.
2019 ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை சிறிலங்காவின் நடந்த குண்டுவெடிப்புக்குப் பின்னர், கோட்டாபயவின் ஆதரவு அலை எழுந்தது.
சிறிலங்காவில் ‘அரகலய’ எதிர்ப்பு இயக்கம் என்று அழைக்கப்படும் வெகுஜன எதிர்ப்பு இயக்கத்திலிருந்து அனுரவின் அலை வந்தது.
பாரம்பரிய முக்கிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செல்வாக்கைக் கலைத்து கோட்டாபய அதிபரானார்.
அந்த நேரத்தில் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் சக்தியாக இருந்த சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அதன் அரசியல்வாதிகளை கலைத்து அனுர அதிபரானார்.
பலவீனப்படுத்துவது சாத்தியமற்றது என்று கருதப்பட்ட பாரம்பரிய கட்சிகளை கோட்டாபய பலவீனப்படுத்தினார்; தோற்கடிக்க முடியாது என்று நம்பப்பட்ட ராஜபக்சக்களை அனுர கலைத்தார்.
2019 ஆம் ஆண்டின் இறுதியில் அதிபரான கோட்டாபய 2021 வரை, சுமார் இரண்டு ஆண்டுகள் தொற்றுநோய் காலத்தில் நாட்டை ஆட்சி செய்தார்.
தொற்றுநோயின் முதல் ஆண்டில், இலவச தடுப்பூசிகளை வழங்குவதன் மூலமும், ஏழைக் குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவுகளை வழங்குவதன் மூலமும் பெரிய எதிர்ப்பு இல்லாமல் நாட்டை நிர்வகித்தார்.
அவர் எதிர்கொண்ட முதல் பெரிய பிரச்சினை எரிபொருள் நெருக்கடி.
விலைகள் அதிகரிக்கப்படாவிட்டால் தட்டுப்பாடின்றி எரிபொருளை விநியோகிக்க முடியாது என்று வாராந்த அமைச்சரவை கூட்டங்களில் தீர்மானிக்கப்பட்டது.
பங்கீட்டு முறையை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் இருந்தன.
அப்போது பெட்ரோலிய அமைச்சராக உதய கம்மன்பில இருந்தார். கடனுக்கு எண்ணெய் தேடி உலகம் முழுவதும் பயணம் செய்தார்.
எரிபொருள் நெருக்கடி நெருங்கி வருவதை அறிந்திருந்தும், கோட்டாபய தீர்க்கமான நடவடிக்கை எடுக்கவில்லை.
எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும், அல்லது எரிபொருள் பங்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். பயத்தின் காரணமாக, அவர் இரண்டையும் செய்யவில்லை.
விரைவில், எரிபொருள் வரிசைகள் தோன்றத் தொடங்கின, அதைத் தொடர்ந்து சமையல் எரிவாயுவுக்கான வரிசைகள் தோன்றின.
அனுரகுமார திசாநாயக்க அதிபராகி இப்போது சுமார் ஓராண்டு மற்றும் ஆறு மாதங்கள் ஆகின்றன.
கோட்டாபயவைப் போலவே, அனுரவும் அரசை நிர்வகிப்பதில் முன் அனுபவம் இல்லாத ஒரு தலைவர், இருப்பினும் பொதுமக்கள் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
கோட்டாபயவைப் போலவே, முதல் ஆண்டில் அவரால் நாட்டை சாதாரண சூழ்நிலையில் தொடர்ந்து நடத்த முடிந்தது.
இருப்பினும், இப்போது மற்றொரு அசாதாரண சூழ்நிலை எழுந்துள்ளது – ஈரான் சம்பந்தப்பட்ட போரே அது.
அனுர இப்போது எதிர்கொண்டுள்ள முதல் பிரச்சினை எரிபொருள் நெருக்கடி.
சிறிலங்காவின் இன்றைய பொருளாதாரம், 2019 இல் கோட்டாபய பதவியேற்ற காலத்தில் இருந்ததைப் போன்று இல்லை.
2022 இல் அவர் தப்பி ஓடியபோது, நாடு வங்குரோத்து அடைந்திருந்தது.
வெளிப்புற தாக்கங்கள் ஏற்பட்டால் சிறிலங்காவின் பொருளாதாரம் மீண்டும் சரிந்து விடும் என்று அனைத்துலக நாணய நிதியத்தின் அதிகாரிகள் தங்கள் வருகைகளின் போது பலமுறை எச்சரித்தனர்.
ஈரானுடனான போர் நீடித்தால், கோட்டாபய எதிர்கொண்ட அதே நெருக்கடியை அனுர எதிர்கொள்ள நேரிடும்.
நீடித்த போர் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை நேரடியாகப் பாதிக்கும், இது விலைகள் உயர வழிவகுக்கும்.
இது மத்திய கிழக்கில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேலைகளையும் அச்சுறுத்தக் கூடும். போர் தொடர்ந்தால் சுற்றுலாவும் பாதிக்கப்படும்.
கோட்டாபயவைப் போலவே அனுரவும் அதே நிலையை எதிர்கொள்வாரா? அப்படிச் சொல்வது கடினம்.
ஈரானுடனான போர் பாதியில் முடிவடைந்தால், அனுர உடனடி சிக்கலை எதிர்கொள்ளாமல் போகலாம்.
ஆனால் போரினால் உருவாக்கப்பட்ட உலகளாவிய பொருளாதார நெருக்கடி, அவரது முதல் ஆண்டை விட, இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆண்டுகளை மிகவும் கடினமாக்குகிறது.
ரணில் விக்கிரமசிங்கவினால் முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட வரிகள் மூலம், அனுரவினால் திறைசேரியை பெருமளவில் நிரப்ப முடிந்தது, தேர்தலுக்கு செலவழிக்க சில நிதிகளை இருப்பு வைத்திருந்தார்.
இருப்பினும், போர் தொடர்ந்தாலும் அல்லது முடிவடைந்தாலும், பொருளாதார வீழ்ச்சி இன்னும் தொடரும்.
சிறிலங்கா போன்ற வங்குரோத்தான நாட்டிற்கு, திறைசேரியில் சேமிக்கப்படும் பணம் மற்றொரு நெருக்கடியைத் தாங்க போதுமானதாக இருக்காது.
இருப்பினும், நெருக்கடிகள் ஏற்பட்டாலும், கோட்டாபயவைப் போல அனுர நாட்டை விட்டு ஓடிப்போக வாய்ப்பில்லை.
காரணம், கோட்டாபயவைப் போலல்லாமல், அனுர ஒரு அனுபவமிக்க அரசியல்வாதி.
நிலைமையை நிர்வகிக்க இயலாது என்று அவர் கண்டால், அவர் முன்கூட்டியே தேர்தலுக்கு அழைப்பு விடுக்கலாம்.
இல்லையெனில், அவர் தனது பதவிக்காலம் முடியும் வரை போராடலாம்.
எனவே, கொழும்பில் செய்தியாளர் சந்திப்புகளை நடத்தி நாட்டைக் கைப்பற்றத் தயாராக இருப்பதாகக் கூறுவதை விட்டு, அடுத்த தேர்தலில் வெற்றிபெற மக்களைத் தயார்படுத்துவதுதே எதிர்க்கட்சியின் பணியாகும்.
ஆங்கில மூலம்- உபுல் ஜோசப் பெர்னான்டோ
