மேலும்

வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை- ஆராயுமாறு சிறிலங்கா அதிபர் உத்தரவு

எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க, அரச, தனியார் துறை பணியாளர்களை வீட்டில் இருந்து வேலை செய்யும் முறைமையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயுமாறு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்களைத் தொடர்ந்து, அத்தியாவசிய சேவைகளைப் பராமரிப்பதில் உள்ள சவால்கள் குறித்து சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இன்று அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுடன் உயர்மட்டக் கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.

இதன்போது, உள்நாட்டு விநியோகச் சங்கிலிகளில் உலகளாவிய உறுதியற்ற நிலையின்  தாக்கத்தைக் குறைப்பது மற்றும் முக்கியமான துறைகளின் தடையற்ற செயற்பாட்டை உறுதி செய்வது குறித்து, கவனம் செலுத்தப்பட்டது.

எரிபொருள் விநியோகத்திற்கான கியூ ஆர் குறியீட்டு முறையை முறைப்படுத்தவும், நெறிப்படுத்தவும், குறிப்பாக விவசாயம், மீன்பிடி மற்றும் தொழில் துறைகளை ஆதரிக்கவும்  வலியுறுத்திய, சிறிலங்கா அதிபர், பரந்த பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்க இந்தத் துறைகளுக்கு நிலையான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வது அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் சேமிப்பை ஊக்குவிக்கும் முயற்சியாக, பொது மற்றும் தனியார் துறை பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை செயற்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்யுமாறும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நெருக்கடி காலத்தில் தேசிய எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்கான ஒரு நடவடிக்கையாக தொலைதூர வேலையின் சாத்தியக்கூறு மற்றும் நடைமுறைகள் குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும்  அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *