மேலும்

தடுப்புக் காவல் காலத்தை 48 மணி நேரமாகக் குறைக்கத் தயார்- சிறிலங்கா அதிபர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு சட்டத்தில்,  முன்மொழியப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கான  தடுப்புக் காவல் காலம் 72 மணி நேரத்திலிருந்து 48 மணி நேரமாகக் குறைக்கப்படும் என்று  சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பல்வேறு தரப்பினரால் எழுப்பப்பட்ட கவலைகளைத் தொடர்ந்து, முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டத்தின் சில விதிகளை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் தயாராக இருக்கிறது.

சில நாடுகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் உறுப்பினர்களை அடையாளம் காணும் ஒரு முறையாகப் பயன்படுத்தப்படும் பச்சை குத்துதல் தொடர்பான விதி, சிறிலங்கா சூழலில் தேவையற்றதாகக் கருதப்பட்டால் நீக்கப்படலாம்.

அடக்குமுறைச் சட்டங்களின் தாக்கத்தை நாங்கள் தனிப்பட்ட முறையில் அனுபவித்திருக்கிறோம்.

நானும் எனது அரசியல் இயக்கமும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறோம்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் போன்ற சட்டத்தை அறிமுகப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை.

இருப்பினும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைத் திறம்படக் கையாள்வதற்கான உண்மையான சட்டத் தேவையின் காரணமாகவே ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சட்ட வரைவு குறித்த கவலைகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பாக மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பிற தரப்பினருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட அரசாங்கம் தயாராக இருக்கிறது.

பொதுமக்களை ஒடுக்குவதற்கோ அல்லது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கோ அரசாங்கத்திற்கு எந்த நோக்கமும் இல்லை என்றும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *