மேலும்

சுரேஷ் சாலே மீது 3 குற்றச்சாட்டுகள்- நீதிமன்றில் சிஐடி அறிக்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக  கைது செய்யப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வு சேவை தலைவர், மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு, கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவு, நேற்று 25 பக்க அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

அதன்படி, வவுணதீவில் இரண்டு காவல்துறையினரின் கொலைகள் மற்றும் சாய்ந்தமருது குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளை தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சுரேஷ் சாலே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேக நபராக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர், கடுவாபிட்டிய தேவாலயத்தை இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு அடையாளம் காட்ட, ஒரு புலனாய்வுத் தகவல் வழங்குபவரைப்  பயன்படுத்தியதாகவும், சுரேஷ் சாலே மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, சாரா ஜஸ்மின் மரணத்தை உறுதிப்படுத்த நடத்தப்பட்ட இரண்டு மரபணுப் சோதனைகள் தோல்வியடைந்த நிலையில், மூன்றாவது மரபணுச் பரிசோதனையை நடத்துமாறு சாலே, புலனாய்வாளர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை சாலேயின் சட்டவாளர் நிராகரித்தார், ஈஸ்டர் தாக்குதல்கள் நடந்த நேரத்தில்  அவர் சிறிலங்காவில், இல்லை என்றும் மலேசியாவில் இருந்தார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கை விசாரித்த கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார மேலதிக அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 25 ஆம் நாளுக்கு   ஒத்திவைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *