27 ஈரானிய கடற்படையினருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள சிறிலங்கா
ஈரானிய கப்பல்களுக்கு, மனிதாபிமான உதவிகளை வழங்கும் போது அனைத்துலக மரபுகள் மற்றும் கடல்சார் சட்டத்திற்கு முற்றிலும் இணங்கவே சிறிலங்கா செயற்படுகிறது என சிறிலங்காவின் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் கடல் எல்லைக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள ஈரானியக் கப்பலில் இருந்து 27 கடற்படையினர் அண்மையில் சிறிலங்காவுக்கு வந்துள்ளமை குறித்து ஊடகங்களுக்குச் செவ்வியளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவின் இந்த நடவடிக்கை அனைத்துலக கடல்சார் சட்டம் மற்றும் அகதிகள் மரபுகளால் வழிநடத்தப்பட்டது.
சம்பந்தப்பட்டவர்களின் தேசியம், மதம் அல்லது பூர்வீக நாடு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அனைத்துலக கொள்கைகளுக்கு இணங்க மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிறிலங்கா கடற்கரையில் ஈரானிய கடற்படைக் கப்பலான ஐரிஸ் டேனா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, உள்ளூர் அவசரகாலக் குழுக்கள் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும், உயிர் பிழைத்தவர்களை மீட்கவும் உடனடியாகத் தலையிட்டன.
உயிரிழந்தவர்களின் உடல்களை ஈரானுக்குத் திருப்பி அனுப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலக நெறிமுறைகளை வெளிப்படையாகப் பின்பற்றுவது, சிறிலங்கா வெளிநாட்டு இராஜதந்திர அழுத்தம் அல்லது வெளிநாடுகளின் தலையீட்டைத் தவிர்க்க உதவும்.
அனைத்துலக கடல்சார் சட்டங்கள் மற்றும் மரபுரிமைகளுக்கு இணங்குவதன் மூலம், சிறிலங்கா தேவையற்ற புவிசார் அரசியல் பதற்றங்களை உருவாக்காமல் தனது சர்வதேச கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்றும் என்றும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
