சிறிலங்கா கடற்படையிடம் அணுசக்தி பொருட்களை கண்டறியும் அதிநவீன கருவி
ஆபத்தான இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பொருட்களைக் கண்டறியும் அதிநவீன கருவித் தொகுதியை சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா கொடையாக வழங்கியுள்ளது.
ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான, இந்த கருவித் தொகுதியை, அமெரிக்காவின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாக திணைக்களம் வழங்கியுள்ளது.
சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் இன்று நடந்த நிகழ்வில், சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொடவிடம் இந்தக் கருவியை கையளித்துள்ளார்.
ஆபத்தான இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பொருட்களைக் கண்டறியும், இந்த கருவித் தொகுதி சிறிலங்கா கடற்படையின் கடல்சார் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனை மேம்படுத்தும்.
அத்துடன், அணு மற்றும் கதிரியக்கப் பொருட்களின் சட்டவிரோத கடத்தலைத் தடுக்கவும் பயன்படும்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சங்,
“இந்த மேம்பட்ட கருவிகள், சிறிலங்காவின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதற்கும் முழு பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஒரு முக்கியமானவை.
அணு மற்றும் கதிரியக்க அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து பதிலளிக்கும் கடற்படையின் திறனை மேம்படுத்துவதன் மூலம், நாங்கள் சிறிலங்காவின் பாதுகாப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல் – சர்வதேச கப்பல் பாதைகளைப் பாதுகாப்பதும், சமூகங்களைப் பாதுகாப்பதும், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் கரையோரங்களை தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அடையாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது.
சிறிலங்காவுடனான இந்த கூட்டாண்மை மக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது, பாதுகாப்பான வர்த்தகத்தைப் பராமரிப்பது மற்றும் பிராந்திய பாதுகாப்பிற்கான எங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதை மையப்படுத்தியதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா கடற்படைக்கும் அமெரிக்காவின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாக திணைக்களத்திற்கும் இடையே 2024 பிப்ரவரியில் கையெழுத்திடப்பட்ட, புரிந்துணர்வு உடன்பாட்டைத் தொடர்ந்து, இந்தக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அணுசக்தி மற்றும் கதிரியக்கப் பொருட்களின் சட்டவிரோத போக்குவரத்தைக் கண்டறிந்து தடுப்பதில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
கடந்த மார்ச் மாதம், அமெரிக்காவின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாக திணைக்களத்தின் மூலமாக, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தில் பொருத்துவதற்காக, 5 இலட்சம் டொலர் மதிப்புள்ள புதிய கதிர்வீச்சு கண்டறிதல் கருவிகளை கொடையாக வழங்கியிருந்தது.
இந்தக் கருவித் தொகுதி, ஆபத்தான கதிரியக்கப் பொருட்கள் அன்றாடப் பொருட்கள் ஊடாக துறைமுகத்துக்குள் நுழைவதைத் தடுக்க உதவும்.
சர்வதேச கப்பல் பாதைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதும், அணு மற்றும் கதிரியக்க அச்சுறுத்தல்கள், அமெரிக்கக் கரையை அடைவதற்கு முன்பே தடுத்து நிறுத்தும் நோக்கில் இவற்றை அமெரிக்கா வழங்கியுள்ளது.
கதிர்வீச்சு கண்டறிதல் கருவிகளைப் பயன்படுத்துவதில் சிறப்புப் பயிற்சி மற்றும் கடற்படையின் திறன்களை மேலும் மேம்படுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் சிறிலங்கா கடற்படைக்கு தொடர்ந்து அமெரிக்கா ஆதரவளிக்கும் என்றும் அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை கூறுகிறது.


