நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அதற்கு கிடைத்த கௌரவம்
கனடாவில் தமிழினப் படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டதை, ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது, அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்துள்ள கௌரவம் என்று, பிராம்ப்டன் நகர முதல்வர் பட்ரிக் பிரவுண் தெரிவித்துள்ளார்.
நினைவுத் தூபி அமைக்கப்பட்டதற்கு நாமல் ராஜபக்ச எதிர்ப்பு வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்த கருத்தை பதிவிட்டுள்ளார்.
தமிழினப் படுகொலை நினைவுத் தூபிக்கான நாமல் ராஜபக்சவின் எதிர்ப்பு , அந்த குடும்பத்தின் கரங்களில் அப்பாவிகள் கொல்லப்பட்டதை, அங்கீகரிக்கும் சரியான பாதையில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம் என்பதற்கான உறுதியான சமிக்ஞையாகும்.
ராஜபக்ச குடும்பம் இனப்படுகொலை இடம்பெறவில்லை என உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தால், நீதியை குழப்புவதற்கான நடவடிக்கைள், வழக்கு விசாரணைகளில் இருந்து மறைந்திருத்தல் போன்றவற்றை கைவிட்டு, சர்வதேச விசாரணைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இது அவர்களின் நூரன்பேர்க்கிற்கான தருணம்.
இந்த குடும்பம் பொறுப்புக்கூறலை எதிர்கொள்வதற்கு பதில், சிறிலங்கா அரசால் பாதுகாக்கப்பட்ட நிலையில், ஆடம்பரத்தில் மறைந்துள்ளது. இது வெட்கக்கேடான விடயம்.
ராஜபக்ச குடும்பம் இழைத்துள்ள மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், பொல்பொட், ஸ்லோபோடான் மிலோசோவிக், ஹென்றிச் ஹிம்லர் மற்றும் பிலிசியன் கபுகா ஆகியோர் இழைத்த மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுடன் போட்டியிடும் அளவிற்கு மோசமானவை.
கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழினப் படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும்.“ என்றும் அந்தப் பதிவில் பட்ரிக் பிரவுண் தெரிவித்துள்ளார்.