மேலும்

சர்வதேச இராஜதந்திரிகளுடன் தமிழ் தேசிய பேரவை அவசர சந்திப்பு

வடக்கில் தமிழர்களின் நில இருப்பை உறுதிபடுத்த, சர்வதேச சமூகத்தின் அவசர தலையீட்டைக் கோரி , தமிழ் தேசிய பேரவையினருக்கும், சர்வதேச இராஜதந்திரிகளுக்கும்  இடையில், கொழும்பில் இன்று சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ் தேசிய பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர்  பொ.ஐங்கரநேசன்,  தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ந.சிறீகாந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஆகியோர் இந்தச் சந்திப்புகளில் கலந்து கொண்டனர்.

சந்திப்புகளை தொடர்ந்து,  தமிழ் தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விளக்கமளித்துள்ளார்.

இன்று தமிழ் தேசிய பேரவையின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள், கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களைச்  சந்தித்து? மூன்று அவசர விடயங்கள் தொடர்பில் பேசியிருந்தோம்.

முதலாவதாக, பிரித்தானிய தூதுவர்அன்ரூ பற்றிக்கையும் தொடர்ந்து, இந்திய துணைத் தூதுவர் கலாநிதி பாண்டேயையும், மூன்றாவதாக ஜக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மகான்ரே பிறஞ்சேயையும், தொடர்ந்து பிற்பகல் 3.00 மணிக்கு கனடிய தூதுவரையும், சந்தித்தோம்.

இந்த சந்திப்பின் பொழுது கடந்த 2025 மார்ச் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட, வடமாகாணத்தின் வவுனியா தவிர்ந்த நான்கு மாவட்டங்களில் சுமார் 6000 ஏக்கர் காணியை, சுவீகரிக்கும் சிறிலங்கா அரசின் அரசிதழ் அறிவிப்புக்கு எதிராக, எமது எதிர்ப்பை தெரிவித்திருந்தோம்.

மூன்று மாத காலத்தில் மக்கள் தமது காணிகளுக்கான ஆவணங்களை சமர்ப்பித்து, உரித்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டினை சிறிலங்கா அரசு மீள பெறவேண்டும் என வலியுறுத்தினோம்.

யுத்தகாலத்தில் பலதடவைகள் இடம்பெயர்வுகள் காரணமாகவும், போர் அழிவுகள் காரணமாகவும் , பெருமளவு மக்களின் காணி ஆவணங்களை இழக்க வேண்டி ஏற்பட்டது.

அத்துடன் சுனாமியாலும் எமது மக்கள் சொத்துகளுக்கான ஆவணங்களை இழந்தார்கள். ஆகவே ஆவணங்களை உறதிபடுத்துவது சாத்தியமற்ற விடயம்.

போர் காரணமாக தமிழீழ மக்களின் சனத்தொகை பரம்பல் புலம்பெயர்ந்துள்ளது.

இந்தியாவில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட எமது ஈழத் தமிழர்கள் இந்திய குடிமக்களாக அங்கீகாரமின்றி வாழுகின்றனர்.

அவர்கள் அங்கு அங்கீகரிக்கப்படப் போவதுமில்லை.

இவ்வாறான நிலையில் அந்த மக்கள் தங்களுடைய தாய்நாட்டிற்கு வருகை தரவேண்டிய சூழல் ஏற்பட்டால், அவர்கள் இங்கே வாழ முடியாத சூழல் உருவாகும்.

இந்தியாவிற்கு மிகப்பெரிய பங்கு உள்ளது என்ற அடிப்படையில் இந்தியத் தூதுவரையும் சந்தித்தோம்

இந்த மக்கள் அரசின் பயங்கரவாத அச்சுறுத்தல் மூலமே நாட்டினை விட்டு வெளியேறினார்கள்.

இந்தநிலையில் சிறிலங்கா அரசு இந்த அரசிதழை வெளியிட்டதன் நோக்கம், மக்களின் காணிப் பிரரச்சினைகளை தீர்ப்பதல்ல.

மாறாக மக்களின் ஆவணங்களற்ற காணிகளை அரச காணிகளாக  சுவீகரிப்பதே இவர்களது நோக்கமாக உள்ளது.

ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உரித்துக்கள் வழங்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

இந்த அரசிதழ் மூலம், மேற்கொள்ளப்படுகின்ற விடயத்தினை முற்று முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே குறித்த அரசிதழ் அறிவித்தல் மீளப்பெறப்பட வேண்டும். அதற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இரண்டாவது விடயம், குருந்தூர்மலையில் தொல்பொருள் திணைக்களத்திற்குச்  சொந்தமான  79 ஏக்கர் நிலப்பரப்பிற்கு மேலதிகமாக  325 ஏக்கர் காணியினை விகாரைக்குரிய புத்த பிக்கு கோரியிருந்தார்.

அந்தக் காணிகள் தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமானதல்ல.

எனினும் பிக்குவும் தொல்பொருள் திணைக்களத்தினரும் சிறிலங்கா காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் சொந்தக் காணியில் உழவு நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயிகள் இருவரையும் கைது செய்து , உளவு இயந்திரத்தையும் நீதிமன்றில் நிறுத்தி, நீதிமன்றின் மூலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் .

சிறிலங்காவின் ஜனாதிபதியாக இருந்த போது, ரணில் விக்கிரமசிங்க குறித்த 325 ஏக்கர் நிலத்தையும் விடுவிக்க வேண்டுமென மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கூறியிருந்தார்.

அவ்வாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்வு எட்டபட்ட பின்னரும், அந்த தீர்மானத்தையும் மீறி , இன்றும் கூட அந்த வளாகத்தில் உள்ள குளத்தில் மீன்பிடிக்கவும்,  விவசாயத்திற்கு  குளத்து நீரை பயன்படுத்தவும், விவசாயம் செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

எனவே இவ்விடயத்தில் தலையிட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் இணங்கியவாறு, குறித்த 325 ஏக்கர் நிலத்தையும் தொல்பொருள் திணைக்களம் விடுவிக்கவும், பிக்குவின் அடாவடியை கட்டுப்படுத்தவும் சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளோம்.

மூன்றாவது விடயமாக, தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பில் பேசியிருந்தோம் .

சட்டவிரோதமான விகாரை என்று தெரிந்தும், இன்னமும் அந்த காணிகளை, உரிமையாளர்களிடம் வழங்க சிறிலங்கா அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

தையிட்டி விகாரை சட்டவிரோதமானது, தொல்பொருளுடன் தொடர்பற்றது , சட்டவிரோதமாக கட்டப்பட்டது , அது அகற்றப்பட்டே ஆகவேண்டும், காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

ஆகவே சிறிலங்காவின்  மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக கரிசனை செலுத்தும் அனுசரணை நாடுகளாக, பிரித்தானியா மற்றும் கனடா என்பன இருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபைக்கு இது தொடர்பில் பங்கு இருப்பதால் ஐநாவின் சிறிலங்காவுக்கான வதிவிடப் பிரதிநிதியிடமும் இந்த விடயத்தில் அவரது தலையீட்டை வலியுறுத்தியுள்ளோம் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *