மேலும்

இலங்கையில் மீண்டும் தவறிழைக்கும் அமெரிக்கா – அனைத்துலக ஊடகம்

nisha-biswalஅமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்ட அண்மைய இராஜதந்திரச் செயற்பாடுகள், சிறிலங்காவில் மனித உரிமைகளை மேம்படுத்துதல், பொறுப்புக்கூறல் மற்றும் போருக்குப் பின்னான சமூகத்தின் மத்தியில் மீளிணக்கத்தை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இவ்வாறு The Diplomat ஊடகத்தில், Taylor Dibbert எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிசா பிஸ்வால், வோசிங்டனைத் தளமாகக் கொண்டியங்கும்  பாதுகாப்புக்கான புதிய அமெரிக்க மையத்தில் கடந்த திங்களன்று உரையாற்றியிருந்தார்.

இதன்போது சிறிலங்காவில் அண்மைய வாரங்களில் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்கள் தொடர்பாக நிசா பிஸ்வால் பாராட்டியுள்ளார். அமெரிக்காவின் பராக் ஒபாமா நிர்வாகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரியான நிசா பிஸ்வாலின் சிறிலங்கா மீதான புகழாரமானது அமெரிக்காவின் உயர் அரசியல் அதிகாரிகளின் சிறிலங்கா மீதான அண்மைய பாராட்டுக்களுக்கான பிறிதொரு சான்றாக உள்ளது.

‘சிறிலங்காவில் இடம்பெற்றுள்ள கடந்த இரண்டு தேர்தல்களிலும் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதன் மூலமும் நாட்டை மீளிணக்கப் பாதை நோக்கி கொண்டு செல்வதன் மூலமும் இது சிறப்புக் கவனத்திற்கு உட்பட்டுள்ளது. சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள இத்தகைய முன்னேற்ற நிலையை வரவேற்ற நாடுகளில் அமெரிக்காவும் முன்னிலை வகிப்பதுடன் அமெரிக்காவானது சிறிலங்காவிற்கு தனது ஆதரவையும் உதவியையும் வழங்கவும் முன்வந்துள்ளது.

கடந்த ஆண்டு எமது நாட்டின் இராஜாங்கச் செயலரான கெரி மற்றும் அமெரிக்கத் தூதுவர் பவர் ஆகியோர் சிறிலங்காவிற்கான தமது பயணத்தை மேற்கொண்டிருந்தனர். 2015ல் நான் நான்கு தடவைகள் சிறிலங்காவிற்கு பயணம் செய்திருந்தேன். இந்த ஆண்டு நாங்கள் சிறிலங்காவுடனான முதலாவது கூட்டுப் பங்களிப்புக் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளோம்’ என நிசா பிஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.

nisha-biswal

இவர் மேலும் ‘சிறிலங்காவானது தனது நாட்டில்  நீதியை நிலைநாட்டுதல், அரசியல் உரிமைகளைப் பலப்படுத்துதல், நிலையான அமைதியை உருவாக்குதல் போன்றவற்றில் இன்னமும் பலவற்றைச் செய்ய வேண்டியுள்ள நிலையில், இந்த நாட்டு அரசாங்கமானது நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கான முயற்சிகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வருகிறது.

குறிப்பாக சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது ஏற்கனவே உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களிடம் அவர்களுக்குச் சொந்தமான 3400 ஏக்கர் நிலப்பரப்பை மீளவும் கையளித்துள்ளது. இதில் கடந்த வாரம் கையளிக்கப்பட்ட 177 ஏக்கர் நிலப்பரப்பும் உள்ளடங்குகிறது. சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கில் பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கான சில நிகழ்ச்சித் திட்டங்களை USAID ஆரம்பித்துள்ளதுடன் சிறிலங்காவின் பல புதிய மற்றும் கவர்ச்சிகரமான முதலீட்டு வாய்ப்புக்களை அமெரிக்காவின் வர்த்தக நிறுவனங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கின்றன’ எனச் சுட்டிக்காட்டினார்.

சிறிலங்காவில் இன்னமும் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் உள்ளதாக பிஸ்வால் உறுதிபடத் தெரிவித்துள்ள அதேவேளையில், சிறிலங்கா மீதான ஒபாமா நிர்வாகத்தின் தொடர்ச்சியான நம்பிக்கையானது தவறாகப் பயன்படுத்தப்படுவது போல் தென்படுகிறது.

சிறிலங்கா அரசாங்கத்தின் பல புதிய மறுமலர்ச்சி நிகழ்ச்சித் திட்டங்கள் முழுமையற்றதாகக் காணப்படுகிறது. நிலையான நீதி உட்பட மிகக் கடினமான விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்காவின் கூட்டு அரசாங்கமானது மிகத் தீவிர நடவடிக்கையை முன்னெடுக்கும் வரை அமெரிக்கா இராஜதந்திர ரீதியாக அழுத்தத்தை வழங்க வேண்டும். அத்துடன் இவ்வாறான விவகாரங்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கமானது நிலையான தீர்வை எட்டாதவிடத்து அமெரிக்காவானது சிறிலங்காவுடன் ஆழமான பரஸ்பர உறவுகளைத் தொடரமாட்டாது எனவும் அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கெட்டவாய்ப்பாக, கடந்த சில நாட்களாக சிறிலங்காவிலுள்ள அமெரிக்கத் தூதரகமானது அதிருப்தி தரும் நகர்வுகளை மேற்கொண்டு வருவதை நாம் அவதானித்துள்ளோம். சில நாட்களின் முன்னர், சிறிலங்காவின் தலைநகரான கொழும்பில் அமெரிக்கக் கடற்படையானது சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து பாரியதொரு அணிவகுப்பை மேற்கொண்டிருந்தது. இந்த நிகழ்வை அமெரிக்கத் தூதரகமானது சமூக ஊடகங்களில் அதிகம் பிரபலப்படுத்தியது. இதேபோன்று திங்களன்று இது போன்ற பிறிதொரு சம்பவமும் இடம்பெற்றது.

சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்ட அண்மைய இராஜதந்திரச் செயற்பாடுகள், சிறிலங்காவில் மனித உரிமைகளை மேம்படுத்துதல், பொறுப்புக்கூறல் மற்றும் போருக்குப் பின்னான சமூகத்தின் மத்தியில் மீளிணக்கத்தை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

தமிழ் மக்களுக்கு எதிராக போர் மீறல்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான மீறல்கள் போன்ற பல்வேறு மீறல்களை சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டனர் என்பதை எவரும் மறந்து விடக்கூடாது. போர் முடிவடைந்ததன் பின்னரும் கூட, சிறிலங்கா இராணுவத்தினர் பல்வேறு மனித உரிமை மீறல்கள், பாலியல் மீறல்கள் மற்றும் சித்திரவதைகள் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போர் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் சிறிலங்கா இராணுவத்தினர் மிகவும் அதிகளவில் பிரசன்னமாகியுள்ளமை நாட்டில் மேலும் மோசமான சூழலை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக, கடந்த சில நாட்களாக அமெரிக்காவானது சிறிலங்கா அரசாங்கம் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தினர் ஆகிய இரண்டு தரப்பினருக்கும் தவறான செய்தியை அனுப்புகிறது. இலங்கைத் தீவு மீதான எதிர்கால நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாகத் திட்டமிடும் போது, அமெரிக்கா இதே தவறை இரண்டு தடவைகள் செய்ய மாட்டாது என நம்புகிறோம்.

சிறிலங்காவில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் போன்றவற்றை மேம்படுத்தும் போது வோசிங்ரன் மேலும் உறுதியான நகர்வை முன்னெடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *