மேலும்

துறைமுக நகரத் திட்ட விவகாரத்தில் இழுபறி – 125 மில்லியன் டொலர் இழப்பீடு கோருகிறது சீனா

port-cityகொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் தாமதித்ததால், பெருந்தொகை இழப்பீட்டை தருமாறும் அல்லாவிட்டால், மேலதிக நிலப்பரப்பை உருவாக்க அனுமதிக்குமாறும் சீன நிறுவனம் கோரியிருக்கிறது.

துறைமுக நகரத் திட்டப் பணிகளை சிறிலங்கா அரசாங்கம் ஒரு ஆண்டாக இடைநிறுத்தி வைத்திருந்தமையால், தாமதத்துக்கான இழப்பீடாக 125 மில்லியன் டொலரைத் தரவேண்டும் என்று சீன நிறுவனம் கேட்டுள்ளது.

இல்லாவிட்டால், கடலில் இருந்து மேலதிக நிலப்பரப்பை உருவாக்க அனுமதிக்குமாறும், சீன நிறுவனம் மாற்றுத் திட்டம் ஒன்றையும் முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக சீன நிறுவனத்துடன் பேச்சுக்கள் நடத்தப்படும் என்று பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாளை மறுநாள் சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, இழப்பீடு அல்லது மேலதிக நிலப்பரப்பை உருவாக்கும் விவகாரம் தொடர்பாக முக்கியமான பேச்சுக்களை நடத்தவுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சீன- சிறிலங்கா பேச்சுக்களில் இந்த திட்டம் தொடர்பான விவகாரத்துக்கு முக்கிய இடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்தி வைத்திருந்ததால், இந்தத் திட்டத்தை செயற்படுத்தும், சீன முதலீட்டாளரான சீன தொடர்பாடல் கட்டுமான நிறுவனத்தின் துணை நிறுவனமான, CHEC துறைமுக நகர கொழும்பு நிறுவனமே, 125 மில்லியன் டொலரை இழப்பீடாக கோரியுள்ளது.

“இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுக்களை நடத்தி, சிறிலங்கா பிரதமரின் சீன பயணத்துக்கு முன்பாக, இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இழப்பீடு உள்ளிட்ட விவகாரங்களில் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு மேலதிக காலஅவகாசம் தேவைப்படுகிறது.

பேச்சுக்களில் இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னர், அதுபற்றிய வரைவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெற்ற பின்னரே, உடன்பாடு கையெழுத்திடப்படும் ” என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *