மேலும்

ரணிலின் பயணத்தின் மூலம் சீனாவுடனான உறவு புதிய உச்சத்தைத் தொடும் – சிறிலங்கா எதிர்பார்ப்பு

Srilanka-chinaசீனாவுடன்  நடத்தப்படவுள்ள இருதரப்பு பேச்சுக்கள் மூலம். இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் புதிய உச்சத்தைத் தொடும் என்று எதிர்பார்ப்பதாக, சிறிலங்கா பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.

வரும் 6ஆம் நாள் தொடக்கம், 9 ஆம் நாள் வரையான- மூன்று நாட்கள் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

சீன மக்கள் குடியரசு அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மூன்று நாள் பயணமாக வரும் 6ஆம் நாள் சீனா புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சிறிலங்கா பிரதமர், சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் லி கெகியாங், தேசிய மக்கள் காங்கிரசின்  நிலையியல் குழுவின் தலைவர் சாங் டிஜியாங், ஆகியோருடன் சிறிலங்கா பிரதமர் உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

இந்தப் பேச்சுக்களின் மூலம், இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் புதிய உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பயணம் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தி, பொருளாதார விவகாரங்கள், முதலீடு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புப் பொறிமுறைகளை ஊக்குவிக்கும்.

விஞ்ஞானம், விளையாட்டு,  சுற்றுலா அபிவிருத்தி, நிதிச் சேவைகள், நீர்முகாமைத்துவம் சிறுநீரக நோயாளருக்கான நடமாடும் மருத்துவசேவை உள்ளிட்ட துறைகளிலும் ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது பலதரப்பு உடன்பாடுகள் பலவும் கையெழுத்திடப்படவுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான வலுவான வரலாற்று உறவைப் புதுப்பிக்கும் நோக்கில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின்  அனைத்துலக திணைக்கள அமைச்சர் சோங் தாவோவுடனும், ரணில் விக்கிரமசிங்க பேச்சு நடத்தவுள்ளார்.

இந்தப் பயணத்தில், சிறிலங்கா பிரதமருடன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர்களான, நிமால் சிறிபால டி சில்வா, சரத் அமுனுகம, ரவூப் ஹக்கீம், சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்கிரம,மற்றும் அதிகாரிகளும் இணைந்து கொள்ளவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *