முன்னாள் துணை இராணுவக் குழுக்கள் அரச புலனாய்வுப் பிரிவுகளால் கண்காணிப்பு
போரின் போது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் செயற்பட்ட முன்னாள் துணை இராணுவக் குழுக்களை சிறிலங்கா படைகள், காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக, சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினரும் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்திடம் உள்ள தகவல்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சினால் பராமரிக்கப்படும் பதிவேடுகளின்படி, ஏழு துணை இராணுவக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ரெலோ, புளொட், ஈபிடிபி, ஈபிஆர்எல்எவ், ஈரோஸ், கருணா குழு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியனவே அவை.
இந்தக் குழுக்கள் ரி-56 ரக துப்பாக்கிகள், இலகு இயந்திரத் துப்பாக்கிகள், இலகுரக கைத்துப்பாக்கிகள், பல்நோக்கு இயந்திரத் துப்பாக்கிகள், தானியங்கி ஆயுதங்கள், ரொக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டு ஏவுகலங்கள் , மோட்டார்கள் போன்றவற்றை பயன்படுத்தியதாக பதிவேடுகள் குறிப்பிடுகின்றன.
ஒவ்வொரு குழுவும் பயன்படுத்திய ஆயுதங்களின் எண்ணிக்கைக்கு தனித்தனியாக துல்லியமான புள்ளிவிவரங்களை வழங்குவது கடினம்.
அவர்களிடம் இருந்த ஆயுதங்களில், ஈபிஆர்எல்எவ் இரண்டு ஆயுதங்களையும், ஈபிடிபி 161 ஆயுதங்களையும், புளொட் 23 ஆயுதங்களையும் ஒப்படைத்துள்ளன.
கருணா குழுவிடம் இருந்து 615 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், இந்தக் குழுக்களால் ஒப்படைக்கப்பட்ட மொத்த ஆயுதங்களின் எண்ணிக்கை 801 ஆகும்.
ஈபிடிபி-யின் ஆயுதங்களில், 30 ஆயுதங்கள் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பந்தப்பட்ட விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும் பல்வேறு இடங்களில் தேடுதல் மற்றும் புலனாய்வு சார்ந்த நடவடிக்கைகள் மூலம் 28 ஆயுதங்களை சிறிலங்கா கடற்படை மீட்டு, அவற்றை கடற்படை ஆயுதத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளது.
அந்த ஆயுதங்களில், 19 பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளன, அதே நேரத்தில் ஒன்பது பயன்படுத்த முடியாதவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
முன்னாள் துணை இராணுவக் குழுக்கள், அவற்றின் தலைவர்கள் மற்றும் பெரும்பாலான உறுப்பினர்கள் தற்போது இயல்பான குடிமை நடவடிக்கைகளுக்குத் திரும்பிவிட்டனர்.
அவர்களில் சிலர் தீவிர அரசியலில் நுழைந்துள்ளனர்.
இருப்பினும், இந்தக் குழுக்களில் ஏதேனும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதா என்பதைக் கண்டறிய, பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளன.
பாதுகாப்புப் படைகளின் தலைமையகம், அதன் கீழ் நிறுவப்பட்ட காலாட்படைத் தலைமையகம், அனைத்து இராணுவப் பிரிவுகள், கடற்படை மற்றும் விமானப்படை, காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள் தேவையான கண்காணிப்பு மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.” என்றும் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
