தேவைப்பட்டால் பதவியை விட்டு விலகவும் தயார் – என்கிறார் அனுர
தேவைப்பட்டால் பதவியை விட்டு விலகவும் தான் தயாராக இருப்பதாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் குறித்து கலந்துரையாட அதிபர் செயலகத்தில் சிறிலங்கா சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே, அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
அர்த்தமுள்ள அரசியல் மற்றும் அரசியலமைப்பு மாற்றத்திற்கு இடர்களை எதிர்கொள்ள வேண்டியது அவசியம்.
சீர்திருத்தங்களைத் தொடர்வதால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.
முன்மொழியப்பட்ட திருத்தச் சட்டம் எந்தவொரு குறிப்பிட்ட தனிநபருக்கும் பயனளிக்கும் அல்லது அவரைக் குறிவைக்கும் நோக்கம் கொண்டதல்ல.
நிர்வாக அதிகாரங்களை மீறும் எண்ணம் எனக்கு இல்லை.
அரசின் அதிகாரம் தற்போதுள்ள அரசியலமைப்புச் சட்டக் கட்டமைப்பிற்குள்ளேயே செயற்படுத்தப்படும்.
அரசியல் மாற்றத்திற்கான உறுதிப்பாட்டில் இருக்கிறேன். தேவைப்பட்டால் பதவியை விட்டு விலகவும் தயாராக இருக்கிறேன்.
நான் விலகத் தயாராக இருக்கும் ஒரு நபர். பதவியில் தொடர்ந்து நீடிக்கும் எண்ணத்துடன் நான் இங்கு வரவில்லை.
அவசியமான மாற்றங்களை முன்னெடுப்பதில் இடர்களை ஏற்கத் தயாராக இருக்கிறேன்.
உதாரணமாக, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்த தற்போதைய விசாரணையில் எனது பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் உள்ளதாக பொறுப்பான புலனாய்வு அமைப்புகள் கூறியுள்ளன.
இது உண்மையைத் தேடுவதிலிருந்து என்னைத் தடுக்காது என்றும் சிறிலங்கா அதிபர் உறுதியாகக் கூறியுள்ளார்.
