மேலும்

மகசின் சிறைச்சாலையில் வன்முறை – கைதி ஒருவர் பலி, 11பேர் காயம்

புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட வன்முறைகளின் போது,  கைதி ஒருவர் உயிரிழந்தார் என்றும் 11 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், சிறிலங்காவின் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு மகசின் நிலையில் ஏற்பட்ட சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் போது, அதிகாரிகளால்  துப்பாக்கிச் சூடு எதுவும் நடத்தப்படவில்லை.

மோதல்களில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 11 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைதி ஒருவரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனை நடத்தப்படும்.

தற்போது நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

போதைப்பொருள் அடங்கிய ஒரு பொதி கண்டறியப்பட்டதும், அதைத் தொடர்ந்து நடந்த கைது நடவடிக்கையுமே இந்த வன்முறைக்கான  உடனடித் தூண்டுதலாகத் தெரிகிறது.

இது அரசின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு எதிரான ஒரு எதிர்வினை என்பது தெளிவாகிறது.

மகசின் சிறையில் ஏற்பட்ட இந்த வன்முறைகளில் சுமார் 40 கைதிகள் ஈடுபட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, வெளிப்புறப் பாதுகாப்பை வழங்குவதற்காகக் காவல்துறையினரும் சிறப்பு அதிரடிப் படையினரும் அங்கு அனுப்பப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைக்குள் பார்வையாளர்கள் நுழைவதற்கும் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர் என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *