சிறிலங்காவின் பொருளாதாரம் விரைவில் முழுமையாக வீழ்ச்சியடையும்
சிறிலங்காவின் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளதாகவும், வெகுவிரைவில் ஒரு முழுமையான வீழ்ச்சியைக் காண முடியும் என்றும், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் எல்லாப் பக்கங்களிலும் சிக்கலில் உள்ளது. ஒருபுறம் பொருளாதார மந்தநிலையும், மறுபுறம் மனித உரிமை மீறல்களும் உள்ளன.
முன்னாள் படையினர் ஒடுக்கப்படுவதை நம்மால் காண முடிகிறது, அதே நேரத்தில் பௌத்த பிக்குகளும் அதே கதியை அனுபவிக்கின்றனர்.
வெகுவிரைவில் அரசாங்கம் பௌத்த சங்கங்களைக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும்.
வெகுவிரைவில் சிறிலங்காவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதையும் காண முடியும்.
முன்னாள் அரச புலனாய்வு சேவை தலைவர் சுரேஷ் சாலேயின் கைது மற்றும் அவர் நடத்தப்படும் விதம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளன.
எதிர்க்கட்சிகளிடையே ஒரு வலுவான பிணைப்பு தேவை. சில எதிர்க்கட்சிகள் ஒரு கூட்டு எதிர்க்கட்சியாக ஒன்றிணைந்துள்ளன.
இருப்பினும், இந்தக் கூட்டமைப்பு விரிவுபடுத்தப்பட வேண்டும். கூட்டு எதிர்க்கட்சியை விரிவுபடுத்துவதற்காக நாங்கள் தற்போது பல கட்சிகளுடன் கலந்தாலோசித்து வருகிறோம்,” என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
