மேலும்

இந்திய நிதியுதவியுடன் 100 நோயாளர் காவுவண்டிகளை கொள்வனவு செய்ய அனுமதி

அவசரகால நோயாளர்  சேவைக்காக, முழுமையான மருத்துவ வசதிகள் கொண்ட 100 நோயாளர் காவுவண்டிகளை கொள்வனவு செய்வதற்கு இந்தியாவிடம் நிதி உதவியைப் பெறுவதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

‘1990 சுவ செரிய’ சேவை, இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2018-ஆம் ஆண்டிற்குள் சிறிலங்கா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்த இலவச அவசரகால நோயாளர் காவுவண்டி சேவை அனைத்து மாவட்டங்களிலும் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது; இதன் மூலம் நாளொன்றுக்கு 1,000 முதல் 1,200 அவசரகால நோயாளிகள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர்.

தற்போது பயன்பாட்டில் உள்ள 322 நோயாளர் காவுவண்டிகள் ஆண்டுக்கு சுமார் 90 இலட்சம் கிலோமீட்டர் பயணத் தூரத்தைக் கடக்கின்றன. இதனால், வாகனங்களில் இயந்திரக் கோளாறுகள் மற்றும் தேய்மானம் அதிகரித்துள்ளதாக அமைச்சரவை முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா  அரசாங்கத்தின் சிறப்பு கோரிக்கையை ஏற்று, முழுமையான மருத்துவ வசதிகள் கொண்ட 100 நவீன நோயாளர் காவுவண்டிகளை கொள்வனவு செய்ய நிதி உதவியை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இந்த நிதி உதவியைப் பெறுவதற்காக இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு,  சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *