மேலும்

கோட்டாவின் வாக்குமூலங்களுக்கிடையில் முரண்பாடு- மீண்டும் விசாரணை

முன்னர் வழங்கப்பட்ட வாக்குமூலங்களுக்கிடையில் முரண்பாடு இருந்ததால் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் மூன்றாவது தடவையாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஷ்வர பண்டார, ஒரே நேரத்தில் இரண்டு ஊதியங்களைப் பெற்றார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில்,  கோட்டாபய ராஜபக்ச முன்னர் வழங்கிய இரண்டு வாக்குமூலங்களுக்கு இடையே முரண்பாடுகள் இருப்பதால், எது சரியானது என்பதை உறுதிப்படுத்த, அவரிடம் மூன்றாவது வாக்குமூலம் பெறப்பட்டதாக, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த வாக்குமூலம் பெறும் நடவடிக்கை நேற்று சுமார் மூன்று மணி நேரம் நீடித்ததாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

சுகீஷ்வர பண்டார, பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் 220 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய காலத்தில், அவர் ஒரே நேரத்தில் இரண்டு ஊதியங்களைப் பெற்றார் என்பதே இந்தக் குற்றச்சாட்டாகும்.

இதில் ஒரு ஊதியம் முன்னாள் அதிபர்களுக்கான ஒதுக்கீட்டிலிருந்தும், மற்றொன்று அதிபர் செயலகத்தில் ‘சிறப்புத் திட்டங்களுக்கான பணிப்பாளர் நாயகம்’ என்ற பதவியில் இருந்ததற்காகவும் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *