மேலும்

சிறிலங்கா கடற்படைக்கு 25 ரோந்துப் படகுகளை வழங்குகிறது ஜப்பான்

சிறிலங்கா கடற்படையின் பாதுகாப்பு மற்றும் கடல்சார் கண்காணிப்புத் திறன்களை வலுப்படுத்துவதற்காக, ‘அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவி’ (Official Security Assistance – OSA) திட்டத்தின் கீழ், 1 பில்லியன் யென் (சுமார் 2.08 பில்லியன் சிறிலங்கா ரூபா) பெறுமதியான கொடையை வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது.

இந்த கொடை தொடர்பான புரிந்துணர்வு உடன்பாட்டு ஆவணங்களில், சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவும், ஜப்பானிய அரசாங்கத்தின் சார்பில் சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதுவர் இசோமதா அகியோவும் இன்று கையெழுத்திட்டனர்.

இந்தத் திட்டத்தின் கீழ், சிறிலங்கா கடற்படையின் வடக்கு, கிழக்கு, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு கட்டளை மையங்களில் பயன்படுத்துவதற்காக, 25  படகுகள்’ (Rigid Hull Inflatable Boats – RHIBs) வழங்கப்படவுள்ளன.

இந்தப் படகுகள், கரையோரக் கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் கடல்சார் சட்ட அமுலாக்கச் செயற்பாடுகளுக்குப் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியப் பெருங்கடலில் கடல்சார் நடவடிக்கைகள் அதிகரித்து வரும் சூழலிலும், கடலில் இடம்பெறும் சட்டவிரோதச் செயல்கள் உள்ளிட்ட புதிய பாதுகாப்புச் சவால்கள் எழுந்துள்ள நிலையிலும் இந்த உதவி வழங்கப்படுகிறது.

இது, பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான சிறிங்கா கடற்படையின் செயற்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்தும், அதேவேளையில், மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கும் இது வலுசேர்க்கும்.

இதற்கு முன்னதாக, 2025 ஆம் ஆண்டில், சிறிலங்கா கடற்படைக்காக நீண்ட தூர மற்றும் குறுகிய தூர ட்ரோன்களை (drones) கொள்வனவு செய்வதற்காக, ஜப்பானிய அரசாங்கம் 500 மில்லியன் ஜப்பானிய யென் பெறுமதியான ‘அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவி’ (OSA) கொடையை வழங்கியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *