மேலும்

போரின் போது கொழும்பு, காலியில் ஆயுதக் களஞ்சியங்களை நிறுவியிருந்தது சீனா

போரின் இறுதிக் கட்டத்தில் சிறிலங்காப் படைகளுக்குத் தேவையான ஆயுதங்களை வழங்குவதற்காக,  கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களில் சீனா களஞ்சியங்களை நிறுவியிருந்ததாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

2006 -2009 காலகட்டத்தில், கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களில் சுங்கக் கிடங்குகளை அமைக்கும் அளவிற்கு பீஜிங் சென்றது.

இது போர்த்தளபாடங்களை உடனடியாகப் பெறுவதற்கு வழிவகுத்ததுடன், நாட்டின் போர் முயற்சிகளில் ஒரு தீர்க்கமான பங்கையும் ஆற்றியது.

பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து ஒரு அங்கீகாரக் கடிதத்துடன் நாங்கள் அங்கு செல்ல முடிந்தது என்பதே இதன் பொருள்.

இது ஒரு ஆயுதப் பல்பொருள் அங்காடிக்கு,  கொள்வனவுப் பட்டியலை எடுத்துச் செல்வது போன்றது.

எங்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு, அதைப் பயன்படுத்திய பின்னர் பணம் செலுத்தலாம்.

சீனாவினால் முன்கூட்டியே கொண்டு வரப்பட்ட பல்வேறு வகையான இராணுவப் பொருட்கள் இந்தக் களஞ்சியங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.

இது சிறிலங்கா தனது நடவடிக்கைகளுக்குத் தேவையானவற்றை உடனடியாகப் பெற அனுமதித்தது.

வேறு எந்த நாடும் மற்றொரு நாட்டில் இதுபோன்ற ஒன்றைச் செய்ததா என்று எனக்குத் தெரியவில்லை.

ஆனால், அவர்கள் எல்லாப் பொருட்களையும் களஞ்சியத்திற்குக் கொண்டு வந்தனர், நாங்கள் சென்று அவற்றைச் சேகரித்தோம்.

போரின் இறுதி ஆண்டுகளில் சீனாவின் இராணுவ ஆதரவு மிக முக்கியமானதாக மாறியது.

30 ஆண்டு காலப் போரில், வெற்றியை அடைவதற்கு அது “மிக முக்கியமானது”.

இந்தியா, அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, உக்ரைன் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளிடமிருந்து சிறிலங்கா ஆதரவைப் பெற்றபோதிலும், குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகள் இருந்தன.

சில நாடுகள் கொடிய ஆயுதங்களை வழங்குவதற்கு கட்டுப்பாடுகளை விதித்து, பயிற்சிகள் அல்லது கொடிய ஆயுதங்களல்லாத ஆதரவுக்கு மட்டுமே உதவியை மட்டுப்படுத்தின.

மற்றவை ஆயுதங்கள் அல்லது வெடிமருந்துகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் தடைகளை விதித்தன.

சில சமயங்களில், எங்களால் ஆயுதங்களை வாங்க முடிந்தது, ஆனால் வெடிமருந்துகளை வாங்க முடியவில்லை.

மற்ற வேளைகளில், ஆயுதங்கள் இல்லாத போர்க்கப்பல்கள் போன்ற தளங்கள் எங்களுக்கு வழங்கப்பட்டன.

இதற்கு மாறாக, ஆயுதங்கள், வெடிமருந்துகள், பீரங்கிகள், மோட்டார்கள், ராடர்கள், கவச வாகனங்கள், போர் பீரங்கிகள், விமானங்கள் மற்றும் கடற்படைக் கப்பல்கள் உள்ளிட்ட விரிவான இராணுவ ஆதரவை சீனா வழங்கியது.

இதன் மூலம் 2006-2009 காலகட்டத்தில் சிறிலங்கா பிரதான பாதுகாப்பு வழங்குநராக அது விளங்கியது.

சிறிலங்காவுடனான சீனாவின் இராணுவ ஒத்துழைப்பு 1971-ஆம் ஆண்டிலேயே தொடங்கியிருந்தாலும், போரின் இறுதி ஆண்டுகளில் அது குறிப்பாக முக்கியத்துவம் பெற்றிருந்தது.

சுமார் 2005 முதல் 2009 வரை, சீனா தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடலுக்கு அப்பால், குறிப்பாக இந்தியப் பெருங்கடலில் கவனம் செலுத்தத் தொடங்கியது.

எங்களின் புவிசார் மூலோபாய இருப்பிடத்தின் காரணமாக சிறிலங்கா ஒரு முக்கியக் கவன மையமாக மாறியது.

உலகின் மிகவும் பரபரப்பான கிழக்கு-மேற்கு கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றிலிருந்து சிறிலங்கா வெறும் 12 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது.

நாளாந்தம், கிட்டத்தட்ட 300 கப்பல்கள் அவ்வழியே கடந்து செல்கின்றன. இது அந்தத் தீவின் மூலோபாய முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

மோதல் முடிவடைந்ததில் இருந்து சிறிலங்கா அமைதியைப் பேணி வருகிறது. சிறிலங்கா அதிபர் குறிப்பிட்டது போல, 2009 மே 19-க்குப் பின்னர்,  போரினால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

போருக்குப் பிந்தைய காலகட்டத்தில்,  சீனா  விரைவாக சிறிலங்காவின் பிரதான அபிவிருத்திப் பங்காளராக மாறியது.

மோதல் முடிவடைந்தபோது, ​​நெடுஞ்சாலைகள் உட்பட முக்கிய உள்கட்டமைப்புகள் சிறிலங்காவில் இருக்கவில்லை.

2011-ல் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, 2011-ல் நுரைச்சோலை மின் நிலையம், 2011-ல் கொழும்பு அனைத்துலக கொள்கலன் முனையம், 2013-ல் கட்டுநாயக்க-கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை மற்றும் 2013-ல் மத்தல விமான நிலையம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டன.

போரின் போது சிறிலங்காவில்,  ஏற்கனவே சீன நிறுவனங்கள் இயங்கி வந்ததே, உள்கட்டமைப்பு அபிவிருத்தியில் சீனாவின் விரைவான பங்கிற்குக் காரணம்.

கொழும்பில் ஆயுதங்களை வழங்கி வந்த அத்தனை சீன நிறுவனங்களும் உடனடியாகக் கட்டுமான நிறுவனங்களாக மாறின.

பல  நிறுவனங்கள் சீன அரசுக்குச் சொந்தமானவை. மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் செயற்படுகின்றன.

இது பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் இருந்து,  அவை பெரியளவிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு விரைவாக மாறுவதற்கு  உதவியது.

இது அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய சாதகத்தை அளித்தது. அவர்கள் ஏற்கனவே இங்கு பணியகங்களுடனும் செயற்பாடுகளுடனும் இருந்தனர்.

மோதலுக்குப் பிந்திய உடனடி காலகட்டத்தில், மேற்கத்திய முதலீடுகள் இருக்கவில்லை.

ஒரு வெற்றிடம் இருந்தது, எங்கள் தேவைகளும் மிக அதிகமாக இருந்தன. மோதலுக்குப் பிறகு சிறிலங்காவில் ஏற்பட்ட அந்த வெற்றிடத்தை, ஆதரவளிக்க யாரும் முன்வராத நிலையில், சீனா உடனடியாக நிரப்பியது.

மோதலின் போதும் அதற்குப் பின்னரும் சீனாவின் பங்கு, இராணுவ மற்றும் பொருளாதார ஈடுபாட்டின் ஒரு கலவையை வெளிப்படுத்தியது.

அது போர்க்கால மற்றும் போருக்குப் பிந்தைய அபிவிருத்தி ஆகிய இரண்டிலும் சிறிலங்காவின் பயணப்பாதையை கணிசமாக வடிவமைத்தது என்றும் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *