ஐந்து நாட்களில் 700 மில்லியன் டொலர் கிடைக்கும்
அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து மே 27 ஆம் நாள், 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக, சிறிலங்காவின் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தற்போதைய நாணய மதிப்பு வீழ்ச்சி நெருக்கடி குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்றுமதி, வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்கள் மற்றும் அனைத்துலக நிறுவனங்களிடம் இருந்து நிதி உதவி ஆகியவற்றின் மூலம் அந்நியச் செலாவணி வரவை வலுப்படுத்தும் முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இந்த மாதம் 27 ஆம் நாள் அனைத்துலக நாணய நிதியத்திடமிருந்து நாங்கள் பெருமளவில் எதிர்பார்க்கிறோம். அதன் பணிப்பாளர் குழு எங்களுக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும்.
இந்த ஆண்டில் மற்ற பலதரப்பு முகமைகளிடமிருந்தும் சிறிலங்கா கூடுதல் நிதி உதவியைப் பெறும்.
இந்த ஆண்டுக்குள் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலும், உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலும் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
அதனுடன் இணைந்த மற்றொரு நிறுவனத்திடமிருந்து 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என்றும் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ கூறினார்.
