மேலும்

காலிக்கு அப்பால் ஒரு மாதமாக தவம் கிடக்கும் 17 ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

ஈரானின்  17 எண்ணெய் தாங்கி கப்பல்கள், காலி கடற்கரைக்கு அப்பால் சிறிலங்காவின் பொருளாதார கடல் எல்லைக்குள் சுமார் ஒரு மாதமாக நங்கூரமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கப்பல்களுக்கு எந்த விநியோகப் பொருட்களும் வழங்கப்படக்கூடாது என அமெரிக்க அதிகாரிகள் சிறிலங்கா மீது  முறைசாரா அழுத்தங்களை  செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல்களுக்கு பொருட்கள் விநியோகத்தை மேற்கொள்வதில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், தனியார் விழங்குநர்கள் மூலமே பொருட்களை பெற்றுள்ளதாகவும், சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்க அதிகாரிகளுக்கு  தெளிவுபடுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த 17 ஈரானியக் கப்பல்களும் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மற்றும் செய்மதிகளால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக புலனாய்வுத் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த வாரம்  அமெரிக்க விமானந்தாங்கிப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜோர்ஜ் வோசிங்டன் இந்தியப் பெருங்கடலை நோக்கிப் புறப்பட்ட நிலையில், சிறிலங்கா கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த ஈரானியக் கப்பல்களைத் தாக்குவதே அதன் நோக்கம் என பலர் சந்தேகித்தனர்.

எனினும், யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலை மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்காவிற்குத் திரும்பக் கொண்டு வருவதற்காகவே அதற்கு மாற்றாக இந்தக் கப்பல் அங்கு செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய கப்பல்கள் குறித்து அமெரிக்காவும் சிறிலங்காவும் இன்னும் ஒரு இராஜதந்திர உடன்பாட்டை எட்டவில்லை.

வொசிங்டன் மீண்டும் ஈரானுடன் இராணுவ மோதலை நோக்கி நகர்ந்து வருவதால், சிறிலங்கா கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள 17 ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்களும் வெடிக்கக் காத்திருக்கும் நேரக் கணிப்பு குண்டுகளைப் போல நாட்டிற்குப் பெரும் அபாயங்களை ஏற்படுத்தலாம் என பாதுகாப்பு  நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்கா இதுகுறித்து சிறிலங்காவுக்கு இன்னும் எந்தவொரு முறையான தகவலையும் அதிகாரப்பூர்வமாக, வெளியிடவில்லை; இருப்பினும், அத்தகைய அறிவிப்பு விரைவில் வரக்கூடும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் மோதல்கள் மூண்டால், சிறிலங்கா  கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள ஈரானியக் கப்பல்கள் தாக்கப்படும் ஆபத்து உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் நிழல் கப்பல்படையைச் சேர்ந்த இந்த எண்ணெய் தாங்கிகள், அமெரிக்க தடையை மீறி எண்ணெயைக் கொண்டு சென்று விநியோகித்து விட்டு, நாடு திரும்ப முடியாமல் சிறிலங்கா கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டுள்ளன.

333 மீற்றர் நீளமான இந்தப் பாரிய கப்பல்களை சிறிலங்கா கடற்படை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *