மேலும்

இரண்டு ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை சந்தித்தது சிறிலங்கா ரூபா

கடந்த இரண்டு ஆண்டுகளில் முதன்முறையாக,  அமெரிக்க டொலருக்கு எதிரான, சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு, நேற்று 324  ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

உலகளாவிய சந்தை நிலையற்ற தன்மை மற்றும் டொலருக்கான அதிகரித்த தேவைக்கு மத்தியில், ரூபாவின் பெறுமதி சரிந்து வரும்  நிலையில்,  நேற்று அமெரிக்க டொலரின் வாங்கும் பெறுமதியை 316.40 ரூபாவாகவும், விற்கும் பெறுமதியை 324.03 ரூபாவாகவும், மத்திய வங்கி நிர்ணயித்துள்ளது.

நாட்டின் பெருமளவிலான வெளிநாட்டுக் கடன்களைக் கருத்தில் கொண்டு, பலவீனமடைந்து வரும் ரூபாவின் மதிப்பு,  சிறிலங்காவின் நிகர சர்வதேச முதலீட்டு நிலையை கட்டமைப்பு ரீதியாக சேதப்படுத்துவதாக, உலகளாவிய வர்த்தக சுழற்சி பொருளாதார நிபுணர் கலாநிதி கென்னத் டி சில்வா தெரிவித்துள்ளார்.

” அமெரிக்க டொலரின் பெறுமதி, சுமார் 317 முதல் 320 இலங்கை ரூபா என்ற நிலைக்கு நகர்வது, சிறிலங்காவின் நிகர உள்நாட்டு உற்பத்தி அல்லது வெளிநாட்டு இருப்புநிலைக் குறிப்பைக் கட்டமைப்பு ரீதியாகப் பலவீனப்படுத்துகிறது.

ஏனெனில், நாடு ஒப்பீட்டளவில் குறைந்த வெளிநாட்டுச் சொத்துக்களை (16.1 பில்லியன் அமெரிக்க டொலர்) வைத்திருக்கும் அதேவேளையில், அமெரிக்க டொலரில் மதிப்பிடப்பட்ட பெருமளவிலான வெளிநாட்டுக் கடன்களை (66.5 பில்லியன் அமெரிக்க டொலர்) கொண்டுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ரூபாவின் மதிப்பு குறையும்போது, ​​கடனின் அமெரிக்க டொலர் மதிப்பு மாறாமல் இருந்தாலும், தேசிய இருப்புநிலைக் குறிப்பின் கடன் பக்கமானது சிறிலங்கா ரூபா அடிப்படையில் கடுமையாக உயர்கிறது.

இதன் நிகர விளைவு, மேலும் ஆழமான எதிர்மறை நிகர உள்நாட்டு உற்பத்தியாகும்.அதாவது, நாட்டின் வெளிநாட்டு நிகர மதிப்பு அல்லது இருப்புநிலைக் குறிப்பில் ஒரு சரிவு ஏற்படுகிறது,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா வருவாய் மற்றும் வெளிநாட்டிலிருந்து வரும் பணவரவுகளின் ஆதரவுடன், சிறிலங்காவின் வெளிநாட்டுத் துறை அண்மைய காலாண்டுகளில் முன்னேற்றம் கண்டுள்ளது.

இருப்பினும், இன்னும் மீண்டு வரும் கையிருப்பு நிலை மற்றும் அதிக வெளிநாட்டுக் கடன் இருப்பு காரணமாக, பொருளாதாரம் நாணய மதிப்பு அதிர்ச்சிகளுக்கு ஆளாகக் கூடியதாகவே உள்ளது.

வணிகங்களும் குடும்பங்களும் ஏற்கனவே அதிக வரிகள், உயர்ந்த எரிசக்தி மற்றும் போக்குவரத்துச் செலவுகளை எதிர்கொண்டு வரும் வேளையில், இந்த மதிப்பு வீழ்ச்சி உள்நாட்டு நிதி நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தக் கூடும் என்றும், கலாநிதி கென்னத் டி சில்வா எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *