மேலும்

செம்மணி புதைகுழியில் இன்று மீண்டும் தொடங்கியது 3ஆம் கட்ட அகழ்வுப் பணி

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணி இன்று காலை,  யாழ்ப்பாண நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பமாகியுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன், அவற்றில் 239 எலும்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.

மேலும் எலும்புக்கூடுகள் அந்தப் பகுதிகளில் காணப்படுவதால் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், அதற்கு 08 வாரகாலம் தேவை என்றும்,  சட்ட மருத்துவ அதிகாரி மன்றில் விண்ணப்பம் செய்ததற்கு அமைவாக , மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கு நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், 2025 செப்ரெம்பர் 06ஆம் நாள் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணி நிறுத்தப்பட்ட நிலையில் சுமார் 8 மாத காலத்திற்குப் பின்னர்   மூன்றாம் கட்ட அகழ்வு பணி  இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பருவ மழையினால் தூர்ந்து போன புதைகுழிப் பகுதி இன்று துப்புரவு செய்யப்பட்டது. இன்றைய அகழ்வில் எந்த எலும்புக்கூடுகளும் மீட்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *